ஈழப்போர் மீறல்கள் தொடர்பிலான ‘சனல் 4’ காணொலிகள் குறித்தும் முழுமையான விசாரணை நடத்துக! – நேற்று சபையில் சாணக்கியன் வலியுறுத்து.

ஈஸ்டர் குண்டுவெடிப்பு தொடர்பாக ‘சனல் 4’ இல் வெளியான காணொலியின் அடிப்படையில்விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன என அமைச்சர் முன்பு கூறியிருந்தார். எனினும், அதற்கு முன்பாகவே ‘சனல் 4’ இல் வெளியான மூன்று காணொலிகள் உள்ளன. அவற்றில் ஈழப் போர் காலத்தில் இடம்பெற்றவை எனக் கூறப்படும் இராணுவத்தின் மனித உரிமை மீறல்கள் மற்றும் கொடுமைகள் குறித்த விடயங்கள் வெளிப்படுத்தப்பட்டன. ஆகையால், அவை தொடர்பாகவும் முறையான விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டியது அவசியமாகும்.”

இவ்வாறு நேற்று நாடாளுமன்றத்தில் வலியுறுத்தினார் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவரும் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா. சாணக்கியன்.

ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் விவகாரத்தை ஒட்டி நேற்று சபை ஒத்திவைப்பு வேளையில் நடைபெற்ற விவாதத்தின் போது இந்த விடயத்தை அவர் வலியுறுத்தினார்.

தேசியப் புலனாய்வுப் பிரிவின் தலைவராக இருந்த சுரேஷ் சலே கைது செய்யப்பட்ட விடயம் குறித்து கருத்து வெளியிட்ட பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர், ‘சனல் 4’ இல் வெளியான காணொலியின் அடிப்படையில் விசாரணைகள் நடைபெறுகின்றன என நாடாளுமன்றத்தில் சுட்டிக்காட்டியமையை சாணக்கியன் குறிப்பிட்டார். ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் விவகார விசாரணைக்கு மாத்திரம் ‘சனல் 4’ காணொலியைப் பயன்படுத்தும் அரசு, அதற்கு முன்னர் ஈழப்போர் மீறல்கள் தொடர்பாக ‘சனல் 4’ வெளியிட்ட மூன்றுக்கும் அதிகமான காணொலிகள் உள்ளன, அவற்றின் அடிப்படையிலும் விசாரணைகளை நடத்தி உண்மைகளைக் கண்டறிய முன் வர வேண்டும் என்ற சாரப்பட அரசைச் சாணக்கியன் நேற்றுத் தமது நாடாளுமன்ற உரையில் வலியுறுத்தினார்.

நேற்றைய பேச்சில் சாணக்கியன் சுட்டிக்காட்டிய விடயங்கள் வருமாறு:-

“ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான விசாரணைகளின் ஒரு பகுதியாக சுரேஷ் சாலேயின் கைது இடம்பெற்றுள்ளது. கட்சி வேறுபாடுகளைத் தாண்டி, இந்தக் கைது நடவடிக்கையை நாங்கள் வரவேற்கின்றோம். ஏனெனில், இது முந்தைய ஆட்சிகளில் நிகழ்ந்திருக்க வாய்ப்பே இல்லை என்பதில் எமக்கு உறுதி உள்ளது.

எனினும், சுரேஷ் சலே கைது செய்யப்பட்டிருந்தாலும் கூட, சில உயர்மட்டப் பொலிஸ் அதிகாரிகள் இந்த விசாரணைகளைத் திசைதிருப்பும் நோக்கில் பல்வேறு கோணங்களில் செயல்படுகின்றனர் என்பது எமக்கு தெளிவாகக் காணப்படுகின்றது.

சாரா ஜாஸ்மினின் தாயார் என்னிடம் நேரடியாகக் கூறியுள்ளார் – தன்னிடம் மூன்றாவது முறையாக டி.என்.ஏ பரிசோதனை மேற்கொள்ளப்படவில்லை என்று. அப்படியிருக்கையில், சாரா ஜாஸ்மின் உயிரிழந்தார் என்று எவ்வாறு உறுதியாகக் கூற முடியும்? மேலும், ஒரு பொலிஸ் அதிகாரி, சாரா ஜாஸ்மின் இறப்பதற்கு முன் இரண்டு மாத கர்ப்பிணியாக இருந்தார் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும், பிள்ளையான் சிறையில் இருந்த காலத்தில் ‘வேட்டை’ என்ற பெயரில் ஒரு புத்தகத்தை வெளியிட்டார். ஆனால், அந்தப் புத்தகத்தை உண்மையில் எழுதியவர் றோஹான் குணரட்ண என்ற பேராசிரியர் என்பதில் எமக்கு உறுதியான தகவல்கள் உள்ளன.

இதனை உறுதிப்படுத்தும் வகையில், ஒரு விசேட விசாரணைக் குழுவை அமைத்தால், அதற்கான சாட்சியங்களையும் ஆதாரங்களையும் வழங்க நாங்கள் தயாராக இருக்கின்றோம். இந்தப் புத்தகம் எவ்வாறு எழுதப்பட்டது, யார் தகவல்களை வழங்கினர், யார் வெளியிட்டனர் என்பன குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டால், பல முக்கியமான உண்மைகள் வெளிச்சத்துக்கு வரும்.

குறிப்பாக, இந்த உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்படுவது குறித்து அரசுக்கு எனது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன். ஏனெனில், 2020 ஆம் ஆண்டு நாம் எதிர்க்கட்சியாக இருந்து இந்த விடயத்தைப் பற்றி பலமுறை இந்தச் சபையில் எடுத்துரைத்த போதிலும், அப்போது இருந்த அரசு எந்தவிதமான பொருத்தமான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை.

எனவே, கட்சி வேறுபாடுகளைத் தாண்டி, இந்த விசாரணைகள் நடைபெறுவதற்காக இந்த அரசுக்கு நான் உண்மையிலேயே நன்றி தெரிவிக்கின்றேன். சுரேஷ் சலே போன்ற நபர்களைக் கைது செய்வது சாத்தியமற்ற ஒன்றாகக் கருதப்பட்ட நிலையில், அவரைக் கைது செய்து விசாரணைகளை முன்னெடுப்பது பாராட்டத்தக்க செயல் ஆகும்.

இந்த விசாரணைகளுக்கு எங்களால் வழங்கக்கூடிய முழுமையான ஒத்துழைப்பையும் தொடர்ந்து வழங்குவோம்.

இந்நாட்களில் பேசுபொருளாக உள்ள இன்னொரு முக்கிய விடயம் இந்த உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக எழுதப்பட்ட புத்தகமாகும். 2021 – 2022 காலப்பகுதியில் பிள்ளையான் ‘வேட்டை’
என்ற பெயரில் தமிழில் ஒரு புத்தகத்தை வெளியிட்டார். அந்தப் புத்தகத்தை உண்மையில் அவர்தான் எழுதினாரா என்பது இந்த நாட்டில் உள்ள அனைவருக்கும் சந்தேகமே.

நான் பொறுப்புடன் கூறுகின்றேன் – அந்தப் புத்தகத்தை எழுதியவர் றோஹான் குணரட்ண என்ற நபர். அவர் ஒரு தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் பாதுகாப்பு ஆய்வுகள் பேராசிரியராக உள்ளார். தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் பாதுகாப்பு ஆய்வுகள் எவ்வாறு கற்பிக்கப்படுகின்றன என்பது குறித்து கூட கேள்விகள் எழுகின்றன.

உங்கள் கீழ் ஒரு விசேட குழுவை அமைத்து இந்த விவகாரத்தில் விசாரணை நடத்துங்கள். பிள்ளையானுக்காக இந்தப் புத்தகத்தை எழுத றோஹான் குணரட்ணவுக்குத் தகவல்களை வழங்கிய நபரை நான் அடையாளப்படுத்தத் தயாராக இருக்கின்றேன். அவர் மூலம் இந்தப் புத்தகம் உருவாக்கப்பட்டது. பின்னர் அது பிள்ளையான் மூலம் வெளியிடப்பட்டது.

இந்தப் புத்தகத்தைச் சுற்றி எமக்கு பல சந்தேகங்கள் உள்ளன. குறிப்பாக, றோஹான் குணரட்ணவை பொலிஸ் தலைமையகத்தின் ஏழாவது மாடிக்கு அழைத்துச் சென்ற நபர் யார் என்பதை கவனிக்க வேண்டும். திரிப்போலி குழுவுடன் மற்றும் இஸ்லாமிய மையங்களுடன் தொடர்புடைய ஓட்டமாவடிப் பகுதியைச் சேர்ந்த கலீல் என்ற நபர் இதற்குப் பின்னணியில் உள்ளார்.

இந்தக் கலீல் என்பவர் முன்பு பொலிஸ் பைஸ், சமத் போன்ற நபர்களுடன் இணைந்து செயல்பட்டவர். மேலும், 2009 இற்குப் பின்னர் ஏறாவூர் பகுதியின் பொறுப்பில் இருந்த இஸ்மாயில் இஷாக் என்பவருடனும் இவருக்கு தொடர்புகள் இருந்தன. மேலும், 2015 – 2018 காலப்பகுதியில் இவர் பிள்ளையானுடன் சிறையில் இருந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதி மட்டத்தில் இந்த விசாரணைகளை முன்னெடுக்க ஆர்வம் இருந்தாலும், பொலிஸில் உள்ள அனைவரும் அதே நேர்மையுடன் செயல்படுகின்றனர் என்று என்னால் நம்ப முடியவில்லை. பொலிஸில் உள்ள ஒரு பகுதி இந்த விசாரணைகளைத் திட்டமிட்ட முறையில் திசைதிருப்ப முயற்சிக்கின்றது என்ற சந்தேகம் எமக்கு உள்ளது.

முன்னர் கூறப்பட்டபடி, மத அடிப்படையிலான குற்றச்சாட்டுகள் முன்வைத்து, தேவையற்ற நபர்கள் தொடர்புபடுத்தப்பட்டனர். சிலர் கொலை செய்யப்பட்டனர் எனக் கூறப்பட்ட நிலையில், தற்போது அந்த நபர் நாட்டைவிட்டு தப்பிச் சென்றுள்ளார் எனத் தகவல்கள் வெளியாகின்றன.

என்னிடம் ஆதம் லெப்பை முஹம்மது ரமீஸ் என்பவரின் கடிதம் உள்ளது. 12.03.2026 அன்று அவர் ஜனாதிபதிக்கு அனுப்பிய முறைப்பாட்டில், 2017 – 2018 காலப்பகுதியில் சாட்சிகள் திசைதிருப்பப்பட்டனர் எனக் கூறியுள்ளார்.

அவரின் சகோதரர் ஆதம் லெப்பை முஹம்மது ட்ரியாஸ், 21.04.2018 அன்று கொல்லப்பட்டுள்ளார். அவர் ஓர் இராணுவப் புலனாய்வு அதிகாரி. மேலும், எம்.எஸ்.எம். முபாரக் என்பவர் 10.03.2018 அன்று கொல்லப்பட்டுள்ளார். இவர் சஹ்ரான் ஹாசிம் குழுவின் வணிகத் தொடர்புகளுடன் இணைந்திருந்தவர்.

அதேபோல், பழனி பாப்பா என்பவர் 08.06.2018 அன்று சாட்சியளித்த பின்னர் கொல்லப்பட்டுள்ளார். இந்தச் சம்பவங்களில் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களின் சான்றுகள் கூட மீட்கப்படவில்லை.

அமைச்சரே! பொலிஸில் உள்ள சிலர் சாட்சியங்களை மறைப்பதோடு மட்டுமல்லாமல், விசாரணைகளை திசைதிருப்புகின்றனர். இறுதியில் வழக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்வது பொலிஸார்தான் என்பதால், அவர்கள் உண்மையை மறைத்தால் நீதி நிலைநிறுத்தப்பட மாட்டாது.

மேலும், சாரா ஜாஸ்மின் தொடர்பான டி.என்.ஏ. பரிசோதனை குறித்த விவகாரமும் மீண்டும் கவனத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட வேண்டும்.

இறுதியாக, சுலோச்சனா ராமையா என்ற ஊடகவியலாளர், ஈரானிலிருந்து வந்த கப்பல் தொடர்பாக செய்தி சேகரிக்க முயன்றபோது, பொலிஸாரால் தாம் அவமதிக்கப்பட்டார் எனப் புகார் அளித்துள்ளார். ஊடக அடையாள அட்டையைக் காட்டியபோதும் அவரிடம் இழிவான முறையில் நடந்துகொண்டனர் எனக் கூறப்படுகின்றது. ‘இரண்டு ரூபா ஊடகவியலாளர்கள் நாட்டை அழித்துவிட்டார்கள்’ என்ற அளவுக்குப் பேசப்பட்டதாகவும் கூறப்படுகின்றது.

இது மிகவும் கவலைக்குரிய விடயம். இது குறித்து உடனடி விசாரணை நடத்தப்பட வேண்டும்.

இறுதியாகச் சொல்ல விரும்புவது ‘சனல் 4’ ஆவணப்படத்தை அடிப்படையாகக் கொண்டு விசாரணை நடத்தப்பட்டதாக நீங்கள் கூறியுள்ளீர்கள். அதற்கு முன்பாக வெளியான ‘சனல் 4’ ஆவணப்படங்களும் உள்ளன. அவற்றைப் பற்றியும் முழுமையான விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும்.” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.