நம்பிக் காணிகளை அளவீடு செய்ய அனுமதிக்கின்றோம்! நம்பிக்கைத் துரோகம் செய்யாது காணிகளைத் தாருங்கள்!! – தையிட்டி விகாரை அமைந்துள்ள காணி உரிமையாளர்கள் உருக்கம்.

“எமது பூர்வீகக் காணிகளை விகாரைக்காகச் சுவீகரிக்க மாட்டோம் என வழங்கப்பட்ட உறுதிமொழியை அடுத்தே நில அளவீட்டுக்குச் சம்மதித்துள்ளோம். வெசாக் தினத்துக்கு முன்னதாக எமது நிலங்கள் எம்மிடம் கையளிக்கப்படும் என நம்புகின்றோம்” என்று தையிட்டி காணி உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

யாழ். மாவட்ட செயலகத்தில் நேற்றுமுன்தினம் சனிக்கிழமை கடற்றொழில் அமைச்சர், மாவட்ட செயலர், தெல்லிப்பழை பிரதேச செயலர் மற்றும் நில அளவைத் திணைக்கள அதிகாரிகளுடன் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் பின்னர், காணி உரிமையாளர்களான சாருஜன் சுகுமாரி மற்றும் பாஸ்கரன் ஆகியோர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே இதனைச் குறிப்பிட்டனர்.

அவர்கள் முன்வைத்த முக்கிய விடயங்களாவன:-

“காணி விடுவிப்புத் தொடர்பாக ஏற்கனவே கொழும்பில் இடம்பெற்ற பேச்சுகளில் மக்கள் உள்வாங்கப்படவில்லை. எனினும், இம்முறை மாவட்ட செயலகத்துக்கு அழைக்கப்பட்டு அமைச்சரின் தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதன்போது, காணிகளின் வரைபடங்கள் அவசியம் என்பதால் நில அளவீட்டுப் பணிகளுக்கு அனுமதி வழங்குமாறு அதிகாரிகளால் கோரப்பட்டது.

காணிகளை அளவீடு செய்வதென்பது அதனை விகாரைக்காகச் சுவீகரிக்கும் மறைமுக முயற்சியோ என்ற பலத்த சந்தேகம் எமக்கு உள்ளது. ஏற்கனவே பிக்குவிடம் எந்த ஆவணங்களையும் கோராத அதிகாரிகள், எம்மை மாத்திரம் ஆவணங்களுடன் வருமாறு அலைக்கழிக்கின்றனர். எமது சந்தேகத்தை அமைச்சரிடம் முன்வைத்த போது, இது நிலங்களை அடையாளம் கண்டு மீண்டும் மக்களிடமே ஒப்படைப்பதற்கான நடவடிக்கை மட்டுமே தவிர, சுவீகரிப்பு அல்ல என அவர் உறுதியளித்தார்” – என்று சுகுமாரி தெரிவித்தார்.

மற்றுமொரு உரிமையாளரான பாஸ்கரன் கருத்துத் தெரிவிக்கையில்,

“காணிகளை விட்டு வெளியேறி 36 வருடங்கள் ஆகிவிட்டன. எல்லைக் கற்கள் அழிக்கப்பட்டுள்ள நிலையில் காணிகளை அடையாளம் காண்பது பெரும் சவாலானது. எமது கடந்த காலக் கசப்பான அனுபவங்களை அமைச்சரிடம் சுட்டிக்காட்டினோம். இந்த அளவீடு நிலங்களை மீளப் பெறுவதற்கான முதற்கட்ட நடவடிக்கை என அவர்கள் வாக்குறுதி அளித்துள்ளனர்” – என்றார்.

நில அளவீட்டுப் பணிகள் நிறைவடைந்ததும் இரண்டு வாரங்களுக்குள் காணிகள் விடுவிக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர். எதிர்வரும் மே மாதம் முதலாம் திகதி வெசாக் தினத்துக்கு முன்னதாக எமது சொந்த நிலத்தில் கால் பதிப்போம் என்ற நம்பிக்கையில் மக்கள் காத்திருக்கின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.