சம்பூர் கடலில் மூழ்கி மூதூர் இளைஞர் பலி! – நண்பர்களுடன் நீராடிய போது நேர்ந்த சோகம்.
சம்பூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெளிச்சவீடு கடற்பரப்பில் நீராடச் சென்ற இளைஞர் ஒருவர், இராட்சத அலையில் சிக்கி நீரில் மூழ்கிப் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.
மூதூர், ஹைரியா நகர் பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய எஸ்.எம். அப்லல் என்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
நேற்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3:40 மணியளவில், மேற்படி இளைஞர் தனது நண்பர்களுடன் இணைந்து சம்பூர் வெளிச்சவீடு கடற்பகுதியில் நீராடிக்கொண்டிருந்தார். இதன்போது திடீரென எழும்பிய இராட்சத அலையினால் அவர் ஆழ்கடலுக்கு இழுத்துச் செல்லப்பட்டார்.
இளைஞர் நீரில் மூழ்கிக் காணாமல்போனதை அடுத்து, அங்கிருந்த பொதுமக்கள் மற்றும் கடற்படையினர் இணைந்து நீண்டநேரம் தீவிர தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர். இதன் முடிவில் இளைஞரின் சடலம் கடற்படையினரால் மீட்கப்பட்டது.
உயிரிழந்த இளைஞரின் சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக மூதூர் தள வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
இந்தச் சோகமான சம்பவம் குறித்து சம்பூர் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
விடுமுறை தினத்தில் நண்பர்களுடன் பொழுதைக் கழிக்கச் சென்ற இடத்தில் நேர்ந்த இந்த அனர்த்தம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
