நீரில் மூழ்கி இருவர் பலி; 6 பேர் மாயம் – தெதுரு ஓயாவில் பெரும் சோகம்.
குருநாகல், நிக்கவரெட்டிய பகுதியில் ஓடும் தெதுரு ஓயாவில் நேற்று நீராடச் சென்ற குழுவினர் நீரில் மூழ்கி அனர்த்தத்துக்கு உள்ளாகியமையில் இருவர் உயிரிழந்துள்ளனர். மேலும் 6 பேர் ஆற்று நீரில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போயுள்ளனர்.
இந்தச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,
புத்தாண்டு விடுமுறையை முன்னிட்டு நிக்கவரெட்டிய பகுதிக்கு வந்திருந்த குழுவொன்றே நேற்று தெதுரு ஓயாவில் நீராடச் சென்றுள்ளது. இதன்போது ஆழமான பகுதியில் சிக்கியமையால் அக்குழுவினர் நீரில் மூழ்கியுள்ளனர்.
நீரில் மூழ்கியவர்களில் இருவர் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர். மேலும் இருவர் உயிருடன் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக நிக்கவரெட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நீராடச் சென்ற குழுவில் எஞ்சிய 6 பேர் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. அவர்கள் ஆற்று நீரில் அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகின்றது.
காணாமல்போனவர்களைக் கண்டறிய கடற்படையினர், பொலிஸார் மற்றும் பிரதேச மக்கள் இணைந்து தீவிர தேடுதல் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
சம்பவம் தொடர்பில் பொலிஸ் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிவிப்பில், நீர்நிலைகளில் நீராடும்போது அப்பகுதியின் ஆழம் மற்றும் நீரோட்டம் குறித்து மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.
புத்தாண்டு கொண்டாட்டங்களுக்காக வந்த இடத்தில் நேர்ந்த இந்த விபரீதம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
