வீதி அபிவிருத்தி அதிகார சபையின் கணக்குகளில் முறைகேடு இல்லை!
வீதி அபிவிருத்தி அதிகார சபையால் ஒழுங்கற்ற முறையில் அல்லது இரட்டை கொடுப்பனவுகள் வழங்கப்பட்டதாக எதிர்க்கட்சியினரால் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் முற்றிலும் உண்மைக்கு புறம்பானவை” என்று வீதி அபிவிருத்தி பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார முன்வைத்த குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளிக்கும் போதே அவர் இதனைத் திட்டவட்டமாக மறுத்தார்.
இது குறித்து பிரதி அமைச்சர் ஊடகங்களிடம் மேலும் தெரிவிக்கையில்,
“வீதி அபிவிருத்தி அதிகார சபையின் கணக்குகளில் இருந்து அத்தகைய முறையற்ற அல்லது இரட்டை கொடுப்பனவுகள் எவையும் வழங்கப்படவில்லை என்பதைப் பொறுப்புடன் தெரிவித்துக்கொள்கின்றேன்.
அதிகார சபையில் தற்போது நடைமுறையிலுள்ள கொடுப்பனவு வழங்கும் முறைகளில் எந்தவிதமான மாற்றங்களும் செய்யப்படவில்லை. பழைய முறைமைகளே தற்போதும் பின்பற்றப்படுகின்றன.
எதிர்க்கட்சியினரால் சுமத்தப்படும் இந்தக் குற்றச்சாட்டுகள் எவ்வித ஆதாரமுமற்றவை. அவை அரசியல் உள்நோக்கம் கொண்டவை மாத்திரமன்றி, அரசின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் முயற்சியாகும்.
வீதி அபிவிருத்தி அதிகார சபையின் நிதி விவகாரங்கள் அனைத்தும் மிகவும் வெளிப்படைத்தன்மையுடன் முன்னெடுக்கப்படுகின்றன. இவ்வாறான தவறான தகவல்களை மக்கள் மத்தியில் பரப்ப வேண்டாம்.” – என்றும் பிரதி அமைச்சர் வலியுறுத்தினார்.
