கணேமுல்ல சஞ்சீவ சுட்டுப் படுகொலை வழக்கு: சட்டத்தரணி தமரா குமாரிக்கு விளக்கமறியல்! – தடுப்புக் காவல் முடிந்த நிலையில் நீதிமன்றால் உத்தரவு.

பாதாள உலகக் குழுவின் தலைவராகச் செயற்பட்ட கணேமுல்ல சஞ்சீவவின் கொலை தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள சட்டத்தரணி தமரா குமாரி அபேரத்னவை எதிர்வரும் மே மாதம் 7 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேற்படி சட்டத்தரணிக்கு எதிராக வழங்கப்பட்டிருந்த தடுப்புக் காவல் உத்தரவுக்கான கால அவகாசம் நிறைவடைந்த நிலையில், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் அதிகாரிகளால் அவர் நேற்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார். இதன்போதே இந்த விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

கணேமுல்ல சஞ்சீவவின் கொலையுடன் தொடர்புடைய சதித்திட்டங்கள் மற்றும் அதற்கு உடந்தையாக இருந்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழேயே இந்தச் சட்டத்தரணி கைது செய்யப்பட்டு விசாரணைகளுக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றார்.

பாதாள உலகக் குழுவினரின் சட்டவிரோதச் செயற்பாடுகளுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் இந்த விவகாரம், சட்டத்தரணிகள் மத்தியிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தச் சம்பவம் குறித்துக் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வரும் நிலையில், வழக்கின் முன்னேற்றம் குறித்த அறிக்கை அடுத்த வழக்குத் தவணையின் போது நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.