மெரிட் அடிப்படையில் பல்கலை நுழைவு எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்! – வடக்கு மாகாண ஆளுநர் வேதநாயகன் பணிப்புரை.

அனைத்துப் பரீட்சார்த்திகளிலிருந்தும் பல்கலைக்கழக நுழைவுச் சதவீதத்தில் வடக்கு மாகாணம் தேசிய ரீதியில் பெற்றுள்ள முதலிடத்தைத் தக்கவைப்பதற்கு அப்பால், அந்த அடைவு மட்டத்தை மேலும் அதிகரிக்க வேண்டும் எனவும், குறிப்பாக ‘மெரிட்’ அடிப்படையிலான பல்கலைக்கழக நுழைவு எண்ணிக்கையை உயர்த்துவதற்குத் தீவிர கவனம் செலுத்த வேண்டும் எனவும் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் வலியுறுத்தினார்.

வடக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் மாதாந்த முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம், ஆளுநரின் தலைமையில் கடந்த வியாழக்கிழமை மாலை ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் அமைச்சு மற்றும் அதன் கீழ் இயங்கும் கல்வி, விளையாட்டு, பண்பாட்டுத் திணைக்களங்களினால் முன்னெடுக்கப்படும் திட்டங்களின் முன்னேற்றங்கள் விரிவாக மீளாய்வு செய்யப்பட்டன. அத்துடன், மத்திய கல்வி அமைச்சின் ஊடாக வடக்கு மாகாணத்திலுள்ள தேசியப் பாடசாலைகளில் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்களின் தற்போதைய நிலவரங்களும் ஆராயப்பட்டன.

இக்கலந்துரையாடலில் ஆளுநரால் முக்கிய விடயங்கள் சுட்டிக்காட்டப்பட்டுப் பணிப்புரைகள் வழங்கப்பட்டன.

மாகாணம் முழுவதுமான ஆளணிப் பரம்பலைச் சீராக்கும் நோக்கில் புதிதாகத் தயாரிக்கப்பட்டுள்ள ஆசிரியர் இடமாற்றக் கொள்கை தொடர்பில் ஆளுநர் விசேட கவனம் செலுத்தினார். இக்கொள்கை தொடர்பில் ஆசிரியர் தொழிற்சங்கங்களுடன் விரைவில் கலந்துரையாடல்களை மேற்கொண்டு, அடுத்த ஆண்டுக்கான ஆசிரியர் இடமாற்றங்களைப் புதிய கொள்கையின் ஊடாகவே நடைமுறைப்படுத்த துரித நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளை அவர் அறிவுறுத்தினார்.

ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் ஓய்வூதியத்துக்கு விண்ணப்பிக்கும் வரை அவர்களது தனிப்பட்ட கோவைகளை இற்றைப்படுத்தாது நிலுவையில் வைத்திருக்கக் கூடாது எனவும், அவற்றை உரிய காலத்தில் இற்றைப்படுத்தி ஒழுங்குமுறைப்படுத்த வேண்டும் எனவும் அவர் அறிவுறுத்தினார். அதேவேளை, நிலுவையில் உள்ள விசாரணைகள் காரணமாக எவருக்கும் ஓய்வூதியம் தாமதமாகும் நிலை ஏற்படக்கூடாது எனவும், விசாரணைகளைத் துரிதமாக நிறைவு செய்ய வேண்டும் எனவும் ஆளுநர் திட்டவட்டமாகப் பணிப்புரை விடுத்தார்.

நிர்வாகச் செயற்பாடுகளில் வலயக் கல்விப் பணிப்பாளர்களின் வகிபாகம் மிக முக்கியமானது என்று சுட்டிக்காட்டிய ஆளுநர், அவர்கள் தற்துணிவுடன் முடிவுகளை எடுத்து உரியவாறு நடைமுறைப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்.

சிறப்பாகச் செயற்படுவதன் மூலம் பெருமளவான உள்ளகப் பிரச்சினைகளைத் தவிர்க்க முடியும் என்பதை நடைமுறை உதாரணங்களுடன் அவர் விளக்கினார். அத்துடன், சிறப்பாகப் பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களை ஒவ்வொரு வலயமும் அடையாளங்கண்டு கௌரவிக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் ஊடான கலாசாரப் பெருவிழாக்களை, பிரதேச செயலக மட்டத்தில் ஜூன் மாத இறுதிக்குள்ளும், மாவட்ட மட்டத்தில் ஜூலை மாத இறுதிக்குள்ளும், மாகாண மட்டத்திலான விழாவை ஓகஸ்ட் மாத இறுதிக்குள்ளும் நிறைவு செய்யத் திட்டமிடப்பட்டுள்ளதாக இக்கூட்டத்தில் ஆளுநருக்குத் தெரிவிக்கப்பட்டது.

மாணவர்களுக்கு விமானப் போக்குவரத்து மற்றும் விண்வெளி தொழில்நுட்பம் தொடர்பான கல்வியை வழங்கும் அமைப்பாகச் செயற்பட்டு வரும் ‘ஏரோ விங்ஸ் ஏரோநாட்டிக்கல் கிளப்’ தொடர்பிலும் கூட்டத்தில் அதன் பிரதிநிதிகளின் பங்கேற்புடன் கலந்துரையாடப்பட்டது. இவ்வமைப்பின் ஊடாக சிவில் விமானப் போக்குவரத்துத் துறையிலுள்ள வாய்ப்புக்கள் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வூட்டுதல் மற்றும் அவர்களைக் கண்காட்சிகளுக்கு அழைத்துச் செல்வது குறித்து ஆராயப்பட்டது. வவுனியா இறம்பைக்குளம் மகளிர் கல்லூரியில் பாடசாலை மட்டத்தில் இக்கழகம் உருவாக்கப்பட்டுள்ளமையால், மாகாணத்தின் ஏனைய பாடசாலை மாணவர்களுக்கும் இது தொடர்பான அறிவூட்டலைச் செய்வதற்குரிய ஒழுங்குகளை மேற்கொள்ளுமாறு ஆளுநர் கேட்டுக்கொண்டார்.

ஜி.சீ.ஈ. உயர்தரப் பரீட்சையில் பௌதிக விஞ்ஞானம் மற்றும் உயிரியல் பிரிவுகளில் சித்தி வீதத்தை அதிகரித்தல் மற்றும் ‘மெரிட்’ அடிப்படையில் பல்கலைக்கழகங்களுக்குத் தெரிவாகும் மாணவர்களின் எண்ணிக்கையை உயர்த்துவது தொடர்பான விசேட கலந்துரையாடலொன்றும் இடம்பெற்றது. இதில் வவுனியாப் பல்கலைக்கழகத் துணைவேந்தர், யாழ்ப்பாணம் பல்கலைக்கழக விஞ்ஞான பீடாதிபதி மற்றும் பாடசாலை அதிபர்கள் கலந்துகொண்டனர்.

உயர்தர மாணவர்களுக்கான பாடப்பரப்புக்கள் உரிய காலத்தில் பூர்த்தி செய்யப்படாமை பெரும் பின்னடைவாக உள்ளமை இங்கு சுட்டிக்காட்டப்பட்டது. இதனை ஒழுங்குபடுத்துவதுடன், இறுதிக்கட்டத் தவணைப் பரீட்சைப் பெறுபேறுகளுடன் மாணவர்களுக்கான ‘இசட்’ புள்ளியையும் கணிப்பிட்டு வெளியிடுவதன் ஊடாக அடைவு மட்டத்தை அதிகரிக்க முடியும் என நம்பிக்கை தெரிவிக்கப்பட்டது. இதற்கான தொடர் நடவடிக்கைகளை எடுக்குமாறு ஆளுநர் கல்வி அதிகாரிகளைப் பணித்தார்.

இக்கலந்துரையாடலில் வடக்கு மாகாண பிரதம செயலாளர், ஆளுநரின் செயலாளர், கல்வி அமைச்சின் செயலாளர், மாகாணக் கல்விப் பணிப்பாளர், விளையாட்டுத் திணைக்களப் பணிப்பாளர், பண்பாட்டலுவல்கள் அலகின் உதவிப் பணிப்பாளர் மற்றும் வலயக் கல்விப் பணிப்பாளர்கள் உள்ளிட்ட பல உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.