சிறு குழந்தையின் எலும்புக்கூடு உட்பட மேலும் 4 மனித என்புத் தொகுதிகள் மீட்பு! – செம்மணியில் நீளும் சோகம்.
யாழ். செம்மணி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 7ஆம் நாள் அகழ்வின் போது, சிறு குழந்தை ஒன்றின் என்புத் தொகுதி உட்பட நான்கு மனித என்புத் தொகுதிகள் நேற்று அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.
செம்மணி மனிதப் புதைகுழியில் இடம்பெற்று வரும் இந்த விசேட தடயவியல் அகழ்வாய்வின் போது, நேற்று அடையாளம் காணப்பட்ட நான்கு என்புத் தொகுதிகளும் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. இதில் ஒரு சிறு குழந்தையின் என்புத் தொகுதி உள்ளடங்கியிருப்பது அங்கிருந்தோரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதுவரை முன்னெடுக்கப்பட்ட தடயவியல் அகழ்வாய்வுத் தளம் ஒன்று மற்றும் இரண்டிலிருந்து மொத்தமாக 250 மனித என்புத் தொகுதிகள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. அவற்றுள் 247 என்புத் தொகுதிகள் இதுவரை முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.
கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற அகழ்வின் போது, சவப்பெட்டியின் நீள, அகல அளவுகளை ஒத்த மற்றும் அதன் மூலைகளில் காணப்படும் ஆணிகளைப் போன்ற அடையாளங்களுடன் கூடிய சந்தேகத்துக்கிடமான பெட்டி ஒன்று கண்டறியப்பட்டது.
இந்தப் பெட்டி தொடர்பான விரிவான அகழ்வுப் பணிகளை இன்று முன்னெடுப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
நீதித்துறை மற்றும் தடயவியல் அதிகாரிகளின் மேற்பார்வையில் இந்த அகழ்வுப் பணிகள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன.






