செம்மணிப் புதைகுழி அகழ்வு: எரிதகன மேடைக்கு அடியில் மனித மண்டையோடு மீட்பு! – இதுவரை 252 என்புத் தொகுதிகள் கண்டெடுப்பு.
யாழ்ப்பாணம் – செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வாராய்ச்சியின் போது, சித்துப்பாத்தி இந்து மயானத்தின் எரிதகன மேடைக்கு அடியிலிருந்து மனித மண்டையோடு ஒன்று அடையாளம் காணப்பட்டுள்ளமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பான மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 9ஆம் நாள் அகழ்வு நேற்று முன்னெடுக்கப்பட்டது. இதன்போது, சிந்துப்பாத்தி இந்து மயானத்தின் எரிதகன மேடையின் அத்திவாரத்துக்குக் கீழாக ஒரு மனித என்புத் தொகுதி புதிதாக அடையாளம் காணப்பட்டது. அந்த மண்டையோடு அத்திவாரத்தின் கீழ் சிக்கியுள்ள நிலையில், எஞ்சிய என்புத் தொகுதிகள் அத்திவாரத்தின் உட்பகுதியிலேயே இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகின்றது. இதன் காரணமாக குறித்த என்புத் தொகுதி நேற்று இலக்கமிடப்படவில்லை.
எதிர்வரும் நாள்களில் எரிதகன மேடையின் அத்திவாரப் பகுதியைத் தோண்டி, முழுமையான அகழ்வுப் பணிகளை முன்னெடுக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதேவேளை, ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட என்புத் தொகுதிகளில் இருந்து மூன்று மனித என்புத் தொகுதிகள் நேற்று முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. அத்துடன் மேலதிகமாக இரண்டு மனித என்பு எச்சக் குவியல்களும் மீட்கப்பட்டுள்ளன.
மீட்கப்பட்ட என்புக் குவியல்களில் ஒன்று மனித என்புத் தொகுதியா என்பதில் சந்தேகம் நிலவுவதால், அது தொடர்பான மேலதிக ஆய்வுகள் ஆய்வுகூடப் பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளன. மற்றைய எச்சங்கள் மனிதனின் கால் பகுதியைச் சேர்ந்தவை என அடையாளம் காணப்பட்டுள்ளன.
செம்மணி மனிதப் புதைகுழியின் முதலாவது மற்றும் இரண்டாவது அகழ்வுத் தளங்களில் இருந்து இதுவரை மொத்தமாக 252 மனித என்புத் தொகுதிகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


