குஜராத்தில் அதிர்ச்சி: 10, 12-ம் வகுப்பு மட்டுமே படித்துவிட்டு கிளினிக் நடத்திய 17 போலி மருத்துவர்கள் கைது!
காந்தி நகர்,
குஜராத் மாநிலம் ராஜ்கோட் மாவட்டத்தில் மருத்துவப் பட்டம் இல்லாமல் பொதுமக்களுக்கு ஆங்கில மருத்துவம் பார்த்து வந்த 17 போலி மருத்துவர்களை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
போலீசாரின் அதிரடி வேட்டை
குஜராத் மாநிலம் ராஜ்கோட் கிராமப்புற மற்றும் தொழில்பேட்டைப் பகுதிகளில் போலி மருத்துவர்களின் நடமாட்டம் அதிகமாக இருப்பதாக போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதன்பேரில், கடந்த 22-ந்தேதி அன்று ராஜ்கோட் கிராமப்புற போலீசாரின் சிறப்பு அதிரடிப் படையினர் மற்றும் உள்ளூர் போலீசார் இணைந்து பல்வேறு கிளினிக்குகளில் திடீர் சோதனைகளை மேற்கொண்டனர்.
10, 12-வது மட்டுமே தகுதி
இந்த சோதனையில், எவ்வித அங்கீகரிக்கப்பட்ட மருத்துவப் படிப்போ அல்லது மருத்துவக் கவுன்சில் பதிவோ இல்லாமல் சட்டவிரோதமாக கிளினிக் நடத்தி வந்த 17 போலி மருத்துவர்கள் பிடிபட்டனர். இவர்களில் பெரும்பாலோர் 10 மற்றும் 12-ம் வகுப்பு மட்டுமே படித்தவர்கள் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்டவர்கள்
இதையடுத்து அல்பேஷ் சோலங்கி, சாவன் டோமடியா, சந்தோஷ்குமார், சந்துபாய் சோலங்கி, அரவிந்த் தேசானி, ஜனக் வன்பரியா, ரபிக் கரானா, அமர் தாஸ், முல்தாஸ் நிமாவத், பவேஷ் கோதியா, பிரியான்ஷு மேத்பாரா, ஹரிபிரசாத் ஜானி, இர்ஷாத் நகானி, துருவ் தாகூர், மனிஷ் பாஸ்வான், ஷரத் யாதவ் மற்றும் ரவி பாஸ்வான் ஆகிய 17 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
மருந்துகள் பறிமுதல்
கைது செய்யப்பட்ட போலி மருத்துவர்களின் கிளினிக்குகளில் இருந்து பெருமளவிலான அலோபதி மருந்துகள், மாத்திரைகள், ஊசிகள் மற்றும் மருத்துவ உபகரணங்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். இவர்கள் மீது பாரதிய நியாய சன்ஹிதா மற்றும் குஜராத் மருத்துவப் பயிற்சியாளர்கள் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
தொழில்பேட்டைப் பகுதிகளில் தங்கியுள்ள ஏழை மற்றும் புலம் பெயர் தொழிலாளர்களை குறிவைத்தே இவர்கள் தங்களின் போலி மருத்துவக் கிளினிக்குகளை நடத்தி வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
