விடைபெற்றார் வியட்நாம் ஜனாதிபதி – வெற்றிகரமாக நிறைவடைந்தது டோ லாமின் இலங்கை விஜயம்.

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் அழைப்புக்கு இணங்க, இலங்கைக்கு அரச விஜயம் மேற்கொண்டிருந்த வியட்நாம் சோசலிசக் குடியரசின் ஜனாதிபதியும் வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழுவின் பொதுச் செயலாளருமான டோ லாம் உள்ளிட்ட தூதுக்குழுவினர், தமது விஜயத்தை வெற்றிகரமாக நிறைவு செய்து, நேற்று இரவு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்டுச் சென்றனர்.

வியட்நாம் – இலங்கை இடையிலான நட்புறவையும் ஒத்துழைப்பையும் மேலும் வலுப்படுத்தி, இரு நாட்டு மக்களுக்கும் பல்வேறு நன்மைகளை பெற்றுத்தரும் வகையில், வியட்நாம் சோசலிசக் குடியரசின் ஜனாதிபதி உள்ளிட்ட தூதுக்குழுவினர் இலங்கையில் வெற்றிகரமான விஜயமொன்றை மேற்கொண்டிருந்தனர்.

வியட்நாம் ஜனாதிபதி ஒருவர் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டது 15 ஆண்டுகளுக்குப் பின்னர் ஆகும். தற்போதைய அரசின் கீழ் பொருளாதார ஸ்திரத்தன்மையை அடைந்து இலங்கை முன்னேறிச் செல்லும் ஒரு தருணத்தில் இந்த விஜயம் அமைந்திருப்பது சிறப்பம்சமாகும்.

வியட்நாம் சோசலிசக் குடியரசின் ஜனாதிபதி உள்ளிட்ட தூதுக்குழுவினரை வழியனுப்புவதற்காக, கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி மற்றும் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள் குழுவினர் விமான நிலையத்துக்கு வருகை தந்திருந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.