நாடாளுமன்றத்தில் வியட்நாம் ஜனாதிபதி உரை – அணிவகுப்பு மரியாதையுடன் கௌரவிப்பு.
வியட்நாம் சோசலிசக் குடியரசின் ஜனாதிபதி டோ லாம் நேற்று இலங்கை நாடாளுமன்றத்துக்கு விஜயம் மேற்கொண்டு வரலாற்றுச் சிறப்புமிக்க விசேட உரையை நிகழ்த்தினார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால இராஜதந்திர உறவுகள் மற்றும் நாடாளுமன்ற ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து அவர் இதன்போது முக்கியத்துவம் அளித்துப் பேசினார்.
நேற்று முற்பகல் 11.05 மணியளவில் நாடாளுமன்றத்தை வந்தடைந்த வியட்நாம் ஜனாதிபதியை, சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன மற்றும் நாடாளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர ஆகியோர் வரவேற்றனர். படைக்கல சேவிதர் உள்ளிட்ட அதிகாரிகளின் அணிவகுப்பு மரியாதையுடன் அவர் நாடாளுமன்றக் கட்டடத்துக்குள் அழைத்துச் செல்லப்பட்டார்.
நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி டோ லாம் மற்றும் சபாநாயகர் ஆகியோருக்கு இடையில் உயர்மட்ட சந்திப்பொன்று நடைபெற்றது.
இச்சந்திப்பில் வியட்நாமின் முன்னாள் தலைவர் ஹோ சி மின் இலங்கைக்கு மேற்கொண்ட வரலாற்றுச் சிறப்புமிக்க விஜயத்தை சபாநாயகர் நன்றியுடன் நினைவுகூர்ந்தார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான நாடாளுமன்ற நட்புறவுச் சங்கத்தின் ஊடாகப் பரிமாற்றங்களை மேம்படுத்தி, இருதரப்புத் தொடர்புகளை வலுப்படுத்துவதன் அவசியம் வலியுறுத்தப்பட்டது.
வியட்நாம் ஜனாதிபதி, சபாநாயகர் தலைமையிலான நாடாளுமன்றத் தூதுக்குழுவை வியட்நாமுக்கு வருமாறு அழைப்பு விடுத்தார்.
முற்பகல் 11.40 மணியளவில் சபா மண்டபத்தில் விசேட உரையாற்றிய ஜனாதிபதி டோ லாம், வியட்நாமின் தற்போதைய அபிவிருத்திப் பயணம் மற்றும் நாடாளுமன்ற இராஜதந்திரத்தின் முக்கியத்துவம், நிலைபேறான அபிவிருத்தி, பிராந்திய ஒத்துழைப்பு மற்றும் மக்கள் மையப்படுத்தப்பட்ட முன்னேற்றம் ஆகியவற்றில் இரு நாடுகளும் கொண்டுள்ள பகிரப்பட்ட அர்ப்பணிப்பு, இலங்கையின் அரசியல் நிலைத்தன்மை மற்றும் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி முயற்சிகளுக்கு வியட்நாமின் முழுமையான ஆதரவு ஆகிய விடயங்களைச் சுட்டிக்காட்டினார்.
வியட்நாம் ஜனாதிபதியின் உரையைத் தொடர்ந்து, பிரதமர் (கலாநிதி) ஹரிணி அமரசூரிய மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ ஆகியோரும் உரையாற்றித் தமது நன்றிகளைத் தெரிவித்தனர்.
இந்த விஜயத்தின் நினைவாக நாடாளுமன்ற விருந்தினர் புத்தகத்தில் ஜனாதிபதி டோ லாம் தனது குறிப்பை இட்டதுடன், பிற்பகல் 12.30 மணியளவில் நாடாளுமன்ற வளாகத்திலிருந்து புறப்பட்டார்.



