இது சதியா? தற்செயலா? யாழ். வைத்தியசாலை தீ விபத்தில் பல ஆயிரம் கோடி ரூபா இழப்பு! – அமைச்சர் சந்திரசேகர் அதிர்ச்சித் தகவல்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை மருந்துக் களஞ்சியசாலையில் ஏற்பட்ட தீ விபத்தால் ஏற்பட்டுள்ள இழப்புகள் பல ஆயிரம் கோடி ரூபாவுக்கும் அதிகமாக இருக்கலாம் என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.

இன்று அதிகாலை தீக்கிரையான மருந்துக் களஞ்சியப் பகுதியை நேரில் சென்று பார்வையிட்ட பின்னர், ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த போதே அவர் இதனைத் குறிப்பிட்டார்.

இந்த அனர்த்தம் குறித்து அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்,

“இந்த அனர்த்தம் எமது மக்களுக்கு ஒரு பேரிழப்பாகும். இது தற்செயலாக நடந்ததா அல்லது ஏதாவது சதிச் செயலாக இருக்குமா என்ற கோணங்களில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. எனினும், இது சதிச் செயலாக இருக்காது என்றே நான் நம்புகின்றேன்.

தீ விபத்துக்கான உண்மையான காரணம் இரசாயனப் பகுப்பாய்வு அறிக்கையின் பின்னரே உறுதிப்படுத்தப்படும்.” – என்றார்.

வைத்தியசாலையில் மருந்துகள் தீக்கிரையாகியுள்ள போதிலும், நோயாளர்களுக்கான மருத்துவ சேவைகளில் எவ்வித பாதிப்பும் ஏற்படாது என்று அமைச்சர் உறுதியளித்தார்.

இந்தச் சம்பவம் குறித்து உரிய அமைச்சுக்குத் தெரியப்படுத்தப்பட்டுள்ளது என்றும், தேவையான மருந்துப் பொருள்களை உடனடியாக யாழ்ப்பாணத்துக்குக் கொண்டுவரத் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார்.

களஞ்சியசாலையில் இருந்த பெறுமதிமிக்க மருந்துகள் மற்றும் உபகரணங்கள் அழிவடைந்துள்ளதால், இதன் நிதி ரீதியான இழப்பு பல ஆயிரம் கோடிகளைத் தாண்டும் என்று அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

யாழ். போதனா வைத்தியசாலை வரலாற்றில் ஒரு பாரிய அனர்த்தமாகப் பார்க்கப்படும் இந்தத் தீ விபத்து குறித்து பொலிஸாரும் துறைசார் அதிகாரிகளும் மேலதிக விசாரணைகளை முடுக்கிவிட்டுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.