பகுப்பாய்வு ஆய்வுகள் நிறைவடையும் வரை எரிந்த பகுதி பொலிஸாரின் கட்டுப்பாட்டில்! – புற்றுநோய் மருந்துகளும் தீக்கிரை என்று ஸ்ரீபவானந்தராஜா தகவல்.

யாழ். போதனா வைத்தியசாலையின் தீக்கிரையான மருந்துக் களஞ்சியப் பகுதி, அரச பகுப்பாய்வுத் திணைக்களத்தின் ஆய்வுகள் நிறைவடையும் வரை பொலிஸாரின் முழுமையான கட்டுப்பாட்டில் இருக்கும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஸ்ரீபவானந்தராஜா தெரிவித்தார்.

யாழ். போதனா வைத்தியசாலையின் முன்னாள் உதவிப் பணிப்பாளரும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான அவர், இன்று அனர்த்தம் இடம்பெற்ற பகுதியை நேரில் ஆராய்ந்த பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துக் கூறினார்.

இன்று அதிகாலை 1.30 மணியளவில் இந்த அனர்த்தம் ஆரம்பமானது என்று தெரிவித்த அவர், தீ விபத்தின் பாதிப்புகள் குறித்து மேலும் குறிப்பிடுகையில்,

“எரியுண்ட களஞ்சியசாலையில் புற்றுநோய் சிகிச்சைக்கான மருந்துகள் உள்ளிட்ட அதிதீவிர சிகிச்சைகளுக்குப் பயன்படுத்தப்படும் பெறுமதிமிக்க மருந்துகள் வைக்கப்பட்டிருந்தன. அவை அனைத்தும் தற்போது தீக்கிரையாகியுள்ளன.

இந்த அனர்த்தத்தால் வைத்தியசாலைக்குப் பல கோடி ரூபா நிதி இழப்பு ஏற்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பாக தற்போது பொலிஸ் விசாரணைகள் ஒருபுறமும், வைத்தியசாலையின் உள்ளக விசாரணைகள் மறுபுறமும் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

தீ விபத்துக்கான காரணம் மற்றும் சேத விவரங்களை உறுதிப்படுத்த பகுப்பாய்வுத் திணைக்களத்தின் அறிக்கை அவசியமாகும். அதுவரை எரியுண்ட பகுதி பொலிஸ் பாதுகாப்பின் கீழ் வைக்கப்பட்டிருக்கும்.” – என்று அவர் சுட்டிக்காட்டினார்.

Leave A Reply

Your email address will not be published.