விஜய்க்கு அநுர வாழ்த்துச் செய்தி இலங்கை – தமிழக உறவு மேலும் வலுப்படும் என்றும் தெரிவிப்பு.

தமிழகத்தின் புதிய முதலமைச்சராகப் பதவியேற்றுள்ள சி. ஜோசப் விஜய்க்கு இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து ஜனாதிபதி தனது உத்தியோகபூர்வ ‘எக்ஸ்’ சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளதாவது:-

“தமிழக முதலமைச்சராகப் பதவியேற்ற சி. ஜோசப் விஜய்க்கு வாழ்த்துகள். இலங்கையும் தமிழகமும் வரலாறு, கலாசாரம், வணிகம் மற்றும் தலைமுறை தலைமுறையாகத் தொடரும் மக்களுக்கிடையிலான நெருக்கமான உறவுகளால் பிணைக்கப்பட்டுள்ளன.

இலங்கையும் இந்தியாவும் மென்மேலும் நெருக்கமான உறவுகளையும் வலுவான கூட்டாண்மையையும் கட்டியெழுப்பி வரும் நிலையில், எதிர்காலம் மகத்தான பொருளாதார வளர்ச்சியையும் வாய்ப்புகளையும் கொண்டுள்ளது.

வலுவான இந்திய – இலங்கை கூட்டாண்மைக்குள் இணைந்து செயற்படுவதன் மூலம், மேலான செழிப்பையும் முன்னேற்றத்தையும் அடைவதற்கு நான் ஆவலுடன் காத்திருக்கின்றேன்.

உங்களுக்கும் தமிழக மக்களுக்கும் அனைத்து வெற்றிகளும் கிடைக்க இலங்கை மக்கள் சார்பாக எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.” – என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

தமிழகத்தில் ஏற்பட்டுள்ள புதிய அரசியல் மாற்றத்தைத் தொடர்ந்து, அண்டை நாடான இலங்கையின் அரச தலைவர் விடுத்துள்ள இந்த வாழ்த்துச் செய்தி, இரு பிராந்தியங்களுக்கும் இடையிலான உறவில் புதிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகின்றது.

Leave A Reply

Your email address will not be published.