வரலாற்றில் முதல்முறையாக ஒரே வரிசையில் திமுக – அதிமுக!

சென்னை,

நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் விஜய்யின் தவெக, 108 இடங்களை கைப்பற்றி வரலாற்று சாதனை படைத்தது. தனிப்பெரும் கட்சியான தவெக, பல்வேறு கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்துள்ளது. தமிழக முதல்-அமைச்சராக விஜய் நேற்று பதவியேற்றுக்கொண்டார்.

தவெக ஆட்சி அமைந்த பின்னர் முதல்முறையாக சட்டசபை இன்று கூடியது. தற்போது புதிதாக தேர்வாகியுள்ள எம்.எல்.ஏ.க்கள் சட்டசபையில் பதவியேற்று வருகின்றனர்.

இந்த நிலையில், சட்டசபையில் இதுவரை கண்டிராத வித்தியாசமான நிகழ்வு அரங்கேறி இருக்கிறது. அதாவது, தமிழ்நாடு அரசியல் வரலாற்றில் எதிர்க்கட்சி வரிசையில் திமுக மற்றும் அதிமுக உறுப்பினர்கள் அருகருகே அமர்ந்துள்ளனர். திமுக, 1967ம் ஆண்டிலும், அதிமுக 1977ம் ஆண்டிலும் ஆட்சிக்கு வந்த நிலையில், அன்றில் இருந்து இரு கட்சிகளே தமிழகத்தை மாறி மாறி ஆட்சி புரிந்து வந்தனர்.

தற்போது த.வெ.க. தனிப்பெரும் கட்சியாக உருவாகி ஆட்சியை பிடித்துள்ளதால், திமுக, அதிமுக எம்.எல்.ஏ.க்கள் எதிர்க்கட்சி வரிசையில் உள்ளனர். அதேபோல், அதிமுக தொடர்ந்து 2வது முறையாக எதிர்க்கட்சி வரிசையில் அமர்வதும் இதுவே முதல்முறை.

Leave A Reply

Your email address will not be published.