குளத்தில் படகு கவிழ்ந்து இளைஞர் ஒருவர் மரணம்! – அனுராதபுரத்தில் சோகம்.

அனுராதபுரம், கெக்கிராவ – கிரிமெட்டியாவ பகுதியில் உள்ள குளத்தில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

பன்னிப்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 28 வயதுடைய இளைஞரே இவ்வாறு பரிதாபமாக உயிரிழந்துள்ளார் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு இன்று தெரிவித்துள்ளது.

உயிரிழந்த இளைஞர் மேலும் ஐந்து நண்பர்களுடன் இணைந்து கிரிமெட்டியாவ குளத்தில் படகு சவாரி சென்றபோதே இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளது என்று பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

ஆறு பேருடன் சென்ற படகு எதிர்பாராத விதமாக குளத்தின் நடுவே கவிழ்ந்துள்ளது. இதன்போது ஏனையவர்கள் தப்பிய போதிலும், மேற்படி இளைஞர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

சம்பவம் குறித்து தகவல் அறிந்த கெக்கிராவ பொலிஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து விசாரணைகளை முன்னெடுத்தனர். இளைஞரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை கெக்கிராவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

நீர்நிலைகளில் போதிய பாதுகாப்பு கவசங்களின்றி படகு சவாரி செய்வதைத் தவிர்க்குமாறு சுற்றுலாப் பயணிகளுக்குப் பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.