இரு சகோதரர்கள் உட்பட மூவர் நீரில் மூழ்கி மரணம் – விக்டோரியா நீர்த்தேக்கத்தில் சோகம்.

கண்டி, தெல்தெனிய பகுதியில் உள்ள விக்டோரியா நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்ற நான்கு இளைஞர்களில் மூவர் நீரில் மூழ்கிப் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

தெல்தெனிய, பம்பரகல கோயிலுக்கு அருகாமையில் உள்ள விக்டோரியா நீர்த்தேக்கப் பகுதிக்கு இன்று நான்கு இளைஞர்கள் நீராடச் சென்றுள்ளனர். இதன்போது, எதிர்பாராத விதமாக இளைஞர்கள் நீரில் மூழ்கியுள்ளனர். அங்கிருந்தவர்களின் முயற்சியால் ஒரு இளைஞர் மட்டும் பாதுகாப்பாக மீட்கப்பட்ட நிலையில், ஏனைய மூவரும் நீருக்குள் மறைந்துள்ளனர்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸாரும் பிரதேச மக்களும் இணைந்து மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் பலனாக, நீரில் மூழ்கிய மூவரினதும் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

உயிரிழந்தவர்கள் 18 முதல் 21 வயதுக்கு இடைப்பட்ட இளைஞர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதில் பெரும் சோகமாக, உயிரிழந்த மூவரில் இருவர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரர்கள் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

விக்டோரியா நீர்த்தேக்கத்தின் ஆழமான மற்றும் அபாயகரமான பகுதிகளில் நீராடுவதைத் தவிர்க்குமாறு பொலிஸார் தொடர்ச்சியாக எச்சரித்து வரும் நிலையில், இந்தத் துயரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் குறித்து தெல்தெனிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.