“கிழக்கின் ஊடக முதுசொம்” ஏ.எல்.எம். சலீமுக்கு கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் நினைவேந்தல் நிகழ்வு – நினைவு மலரும் வெளியீடு.
கிழக்கின் மூத்த ஊடகவியலாளரும், தமிழ் – முஸ்லிம் உறவுகளின் இணைப்புப் பாலமுமாகத் திகழ்ந்த மறைந்த ஏ.எல்.எம். சலீமின் நினைவேந்தல் மற்றும் நூல் வெளியீட்டு விழா நேற்று சனிக்கிழமை கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் நடைபெற்றது.
தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் ஏற்பாடு செய்திருந்த இந்நிகழ்வில், சலீமின் 60 ஆண்டுகால ஊடகப் பயணத்தை விவரிக்கும் 160 பக்கங்கள் கொண்ட நினைவு மலர் வெளியிடப்பட்டது.
சிரேஷ்ட ஊடகவியலாளர் இரா. துரைரத்தினம் தொகுத்த இந்நூலில், பேராசிரியர்கள் மற்றும் சிரேஷ்ட ஊடகவியலாளர்கள் என 37 பேர் சலீமுடனான தமது அனுபவங்களைப் பகிர்ந்துள்ளனர்.
நினைவுப் பேருரைகளை நிகழ்த்திய பிரமுகர்கள் சலீமின் அர்ப்பணிப்பை இவ்வாறு நினைவு கூர்ந்தனர்.
17 வயதில் நிருபராகப் பயணத்தைத் தொடங்கிய சலீம், செய்திகளுக்காகப் பல மைல்கள் பயணித்து உண்மைத் தன்மையை உறுதிப்படுத்துவதில் கண்ணும் கருத்துமாக இருந்தார்.
“இன்று இந்தச் செய்தி வரும், பக்கம் ஒதுக்கி வையுங்கள்” என முன்கூட்டியே ஆசிரியர்களிடம் உரிமையோடு கூறும் அளவுக்குப் பத்திரிகைத் துறையில் செல்வாக்கு பெற்றிருந்தார்.
யுத்த காலத்திலும், மறைந்த தலைவர் எம்.எச்.எம். அஷ்ரப் போன்ற அரசியல் தலைவர்களுடனும் மிக நெருக்கமாகவும் நேர்மையாகவும் பணியாற்றி, இன ஐக்கியத்துக்காக உழைத்தார்.
இந்நிகழ்வில் கலந்துகொண்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் அடுத்த ஊடக விருது வழங்கலின் போது, சலீமின் பெயரில் விசேட விருது ஒன்றை வழங்குவதற்குத் தான் அனுசரணை வழங்குவதாகப் பகிரங்கமாக உறுதியளித்தார்.
தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் தலைவர் ஸ்ரீகஜன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், நாடாளுமன்ற உறுப்பினர்களான மனோ கணேசன், இரா. சாணக்கியன், சிரேஷ்ட ஊடகவியலாளர்களான வீ.தனபாலசிங்கம், எம்.பி.எம். பைருஸ், தேவ கௌரி, ஆனந்த பாலக்கிட்னர், பேராசிரியர் சிவசுப்பிரமணியம் ரகுராம் மற்றும் சலீமின் புதல்வர் அகீல் சலீம் உள்ளிட்ட பலரும் உரையாற்றினர்.
“தன்னை ஒரு பெரிய ஊடகவியலாளர் என்று சொல்வதை விட, ஒரு சாதாரண பத்திரிகை நிருபர் என்று அழைப்பதையே சலீம் எப்போதும் விரும்பினார்” எனப் பேச்சாளர்கள் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டனர்.









