அன்றைய சூழலே இளைஞர்கள் மீது ஆயுதப் போராட்டத்தைத் திணித்தது! பெரும்பான்மையைப் பயன்படுத்தி மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு ஜனாதிபதி அநுரகுமாரவிடம் டக்ளஸ் வேண்டுகோள்.

தமிழ் மக்களாயினும் சரி, சிங்கள மக்களாயினும் சரி, ஆட்சியாளர்களின் அனுமதியுடன் இந்த நாட்டில் போராட்டங்களை முன்னெடுத்திருக்கவில்லை என்றும், அந்தந்தக் காலச் சூழல்கள்தான் இளைஞர்கள் மீது ஆயுதப் போராட்டத்தைத் திணித்தன என்றும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

கொழும்பில் அண்மையில் நடைபெற்ற தேசிய வீரர்கள் தின விழாவில், ‘நிகழ்காலத்திலோ அல்லது எதிர்காலத்திலோ மீண்டும் இந்த நாட்டில் யுத்தம் ஒன்று ஏற்படுவதற்கு இடமளிக்க மாட்டேன்’ என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க வெளியிட்டிருந்த கருத்துத் தொடர்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“இந்த நாட்டில் நடைபெற்ற ஆயுதப் போராட்டத்தின் ஆரம்பகாலப் போராளிகளில் ஒருவன் என்ற அடிப்படையில் நான் இந்தக் கருத்தைக் கூறுகின்றேன். ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க சார்ந்த இயக்கமும் கடந்த காலத்தில் இந்த நாட்டில் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தது. அதேபோன்றுதான் நாங்களும் எமது மக்களின் அபிலாஷைகளுக்காக ஆயுத வழியிலான போராட்டத்தை முன்னெடுத்திருந்தோம்.

இரு தரப்பிற்குமே ஆட்சியாளர்கள் அனுமதி வழங்கிப் போராட்டங்கள் நடக்கவில்லை. மாறாக, அன்றைய காலச் சூழல் தமிழ் மற்றும் சிங்கள இளைஞர்கள் மீது ஏற்படுத்திய நிர்ப்பந்தம் காரணமாகவே ஆயுதப் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டியேற்பட்டது.

தமிழ் மக்களைப் பொறுத்தவரையில், தாங்கள் தமிழர்களாக இருப்பதற்காக ‘இலங்கையர்’ என்ற அடையாளத்தையோ, அல்லது இலங்கையராக இருப்பதற்காகத் ‘தமிழர்’ என்ற அடையாளத்தையோ கைவிடத் தயாராக இல்லை. அவர்கள் தமிழர்களாகவும், அதேநேரத்தில் சம உரிமையுள்ள இலங்கையர்களாகவும் வாழ வேண்டும் என்பதுதான் அவர்களின் உண்மையான அபிலாஷையாகும்.

நாட்டில் நிலவிய வன்முறைகள் அனைத்தும் தற்போது முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளன. எனது நீண்டகால அனுபவத்திலிருந்து கூறுகின்றேன், தமிழ் மக்கள் இனி ஒருபோதும் தங்களின் தரப்பிலிருந்து மற்றுமொரு ஆயுதப் போராட்டத்தைப் பற்றிச் சிந்திக்க மாட்டார்கள்.

ஜனாதிபதிக்கு இருக்கக்கூடிய அரசியல் அனுபவங்களைக் கொண்டு அவர் இனிமேல் யுத்தம் ஒன்று நடைபெற இடமளிக்க மாட்டேன் என்று கூறியிருப்பது நல்ல விடயமாகும். அதேநேரம், இவ்வாறான அமைதியான சூழலில் தமிழ் மக்களின் தேசியப் பிரச்சினைகளுக்கான அரசியல் தீர்வைப் பெற்றுக்கொடுக்கவும் அவர் முயற்சிக்க வேண்டும்.

நாம் நீண்டகாலமாக வலியுறுத்தி வரும் இலங்கை – இந்திய ஒப்பந்தத்தின் ஊடாக ஏற்படுத்தப்பட்ட 13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதில் இருந்தே இந்தத் தீர்வுக்கான ஆரம்பம் அமைய வேண்டும். நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை அதிகாரத்தைக் கொண்டுள்ள இந்த அநுர அரசு, அதற்கான சட்ட திருத்தத்தைக் கொண்டுவந்து, விரைவாக மாகாண சபைத் தேர்தலை நடத்தி எமது மக்களின் அரசியல் அபிலாஷைகளைத் தீர்த்து வைக்க முன்வர வேண்டும் என்பதே எனது எதிர்பார்ப்பாகும்.” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.