மொறக்கொட்டாஞ்சேனை விபத்து அல்ல; பழிவாங்கலுக்கு நடந்த கொடூரக் கொலை! – மனைவி, பிள்ளையின் வாக்குமூலத்தால் அம்பலமான சதி.

மட்டக்களப்பு, சந்திவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மொறக்கொட்டாஞ்சேனை பகுதியில் சைக்கிள் மீது கப் ரக வாகனம் மோதி நபர் ஒருவர் உயிரிழந்த சம்பவம், விபத்து அல்ல என்றும், அது திட்டமிட்டு நடத்தப்பட்ட படுகொலை என்றும் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் அம்பலமாகியுள்ளது.

மொறக்கொட்டாஞ்சேனை – களுவன்கேணி வீதியில் நேற்றுக் காலை சைக்கிளில் பயணித்த நபர் ஒருவர் மீது கப் ரக வாகனம் மோதி விபத்துக்குள்ளானது. இவ்விபத்தில் படுகாயமடைந்த சைக்கிள் ஓட்டுநர், சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

பானகமுவ பகுதியைச் சேர்ந்த 44 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இவரது மரணத்தில் சந்தேகம் இருக்கின்றது என்று உயிரிழந்தவரின் மனைவியும் பிள்ளையும் பொலிஸாரிடம் வாக்குமூலம் அளித்திருந்தனர். இதனைத் தொடர்ந்து, விபத்து நடந்த பகுதியில் தீவிர விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார், சம்பவத்தின் பின்னணியில் திட்டமிட்ட சதி இருப்பதை உறுதி செய்தனர்.

இதன்படி, விபத்தை ஏற்படுத்திய பின்னர் தப்பியோடியிருந்த கப் ரக வாகனத்தின் 24 வயதுடைய சாரதியைச் சந்திவெளி பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபருக்கும் உயிரிழந்தவருக்கும் இடையே நீண்டகாலமாக நிலவி வந்த தனிப்பட்ட குரோதம் மற்றும் பழைய முரண்பாடு காரணமாகவே, கப் ரக வாகனத்தை மோதவிட்டு இந்தக் கொலை அரங்கேற்றப்பட்டுள்ளது என்று பொலிஸாரின் முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் சந்திவெளி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.