வடக்கில் தமிழ்த் தேசிய அரசியல் போர்வையில் சுயநலம் பேணும் தலைவர்களிடம் ஏமாறாதீர்கள் – இப்படி தமிழ் மக்களிடம் ரில்வின் சில்வா பகிரங்க வேண்டுகோள்.

கடந்த காலங்களில் தமிழ்த் தேசிய அரசியல் என்ற போர்வையில் மக்களை உணர்ச்சிவசப்பட வைத்து, வாக்குகளைப் பெற்றுத் தங்களது சுயநல அரசியல் தேவைகளைப் பூர்த்தி செய்துகொண்ட ஏமாற்று அரசியல்வாதிகளின் வெற்று முழக்கங்களை நம்பி மக்கள் இனிமேலும் ஏமாறக் கூடாது என்று மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் நேற்று சனிக்கிழமை தேசிய மக்கள் சக்தியின் மாவட்ட உத்தியோகபூர்வ அலுவலகத்தைத் திறந்து வைத்த பின்னர், ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு கூறினார்.

வழமையான தமிழ்த் அரசியல் தலைமைகள் வட பகுதி மக்களின் உண்மையான அடிமட்டப் பிரச்சினைகளைத் தீர்க்கத் தவறிவிட்டனர் என்றும் அவர் ரில்வின் சில்வா குற்றம் சாட்டினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“தமிழ்த் தேசியவாதம் பேசும் தலைவர்கள் வட பகுதி மக்களின் உண்மையான வாழ்வாதாரப் பிரச்சினைகளுக்கோ, படித்த இளைஞர் – யுவதிகளின் வேலைவாய்ப்புப் பிரச்சினைகளுக்கோ அல்லது பிராந்தியத்தின் பொருளாதார மேம்பாட்டுக்கோ எந்தவொரு நிலையான தீர்வையும் இதுவரை பெற்றுத்தரவில்லை. அவர்கள் மக்களைத் தேர்தல் காலத்தில் மட்டும் உணர்ச்சிவசப்பட வைத்து சுயலாபம் தேடிக்கொண்டனர்.

தென்னிலங்கையைத் தொடரும் அரசியல் கலாசார மாற்றம்
இலங்கையின் ஒட்டுமொத்த அரசியல் கலாசாரமும் தற்போது நேர்மறையான திசையை நோக்கி மாற்றமடைந்து வருகின்றது.

தென்னிலங்கை மக்கள் ஊழலற்ற, நேர்மையான, மக்கள் நலனை முதன்மையாகக் கொண்ட ஒரு புதிய அரசியல் பயணத்தைத் தேசிய மக்கள் சக்தியோடு இணைந்து தொடங்கியிருக்கின்றார்கள். அதே மாற்றத்தையும், புதிய அரசியல் யுகத்தையும் வடக்கு மண்ணிலும் உருவாக்க வேண்டிய பொறுப்பு இங்குள்ள தமிழ் மக்களுக்கும் இருக்கின்றது.

தேசிய மக்கள் சக்தி இன, மத, மொழி பேதங்களுக்கு அப்பால், நாட்டின் அனைத்துக் குடிமக்களுக்கும் சமத்துவமான உரிமைகளையும், சமூக நீதியையும் பெற்றுக்கொடுப்பதில் உறுதியாக இருக்கின்றது.

யாழ்ப்பாணம் மாவட்டத்தின் பாரம்பரியத் தொழில்களான விவசாயம், மீன்பிடி மற்றும் பிராந்தியத்தின் கல்வித்துறை சார்ந்த உள்கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்கு விசேட கவனம் செலுத்தப்படும்.

இப்பகுதி மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்கான தெளிவான, நடைமுறைச் சாத்தியமான பொருளாதாரத் திட்டங்களை எமது கட்சி நாடாளுமன்றத்தில் தொடர்ச்சியாக முன்வைத்து வருகின்றது.

எனவே, எதிர்காலச் சந்ததியின் வாழ்வு சிறக்கவும், தூய்மையான அரசியல் சூழல் வடக்கிலும் மலரவும் யாழ். குடாநாட்டு மக்கள் தேசிய மக்கள் சக்திக்குத் தங்களது பேராதரவைத் தொடர்ந்து வழங்க வேண்டும்.” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.