ஆந்திராவில் கோரத்தாண்டவமாடும் வெப்ப அலை: 4 நாட்களில் 18 லட்சம் கோழிகள் உயிரிழப்பு!

அமராவதி,

ஆந்திராவின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த 20-ந் தேதி முதல் 108 டிகிரிக்கு மேல் வெயிலின் தாக்கம் அதிகரித்து உள்ளதால், அதிக அளவில் வெப்ப அலை வீசிவருகிறது. இந்த வெப்ப அலையால் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் கடந்த 4 நாட்களில் மட்டும் 18 லட்சம் கோழிகள் இறந்துள்ளதாக கோழிப்பண்ணை உரிமையாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

மேலும் கோடைக்காலத்தால் கோழி வளர்ப்புத் தொழில் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். அதிக வெப்பநிலை மற்றும் வெப்பத்தாக்கத்தால் கோழிகள் இறப்பதாக அவர்கள் தெரிவிக்கின்றனர். காற்றோட்டமின்மை, குடிநீர் பற்றாக்குறை மற்றும் மின்வெட்டு ஆகியவையும் கோழிகளின் இறப்பிற்கான காரணங்களாகக் கருதப்படுகின்றன.

கோடைக்காலத்தில் கோழிகள் எடை குறைவது, தீவனம் உண்ணாமல் இருப்பது மற்றும் முட்டை உற்பத்தி குறைவது போன்றவற்றால் இந்தத் தொழில் நஷ்டத்தைச் சந்தித்துள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

வெப்பத்தை தணிக்க பண்ணையைச் சுற்றி சாக்குப்பைகள் மற்றும் துணிகளை நனைத்துக் கட்டியும், சொட்டு சொட்டாக நீர்விட்டும் வருகின்றனர். இருப்பினும் வெப்ப அலையின் தாக்கம் குறையவில்லை என தெரிவிக்கின்றனர். வளர்ப்பு கோழிகள் இறந்ததால் தங்களுக்கு ரூ.54 கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.