மோடி – அநுரவின் மக்கள் நலன்சார் தொலைநோக்கே எமக்கு வழிகாட்டி.

இலங்கை பொலிஸாருக்கு 134 கப் வாகனங்களை
வழங்கி இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜா பெருமிதம்

“இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையும், இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் தொலைநோக்குப் பார்வையும் எமக்கு வழிகாட்டுகின்றன. அந்த வழிகாட்டல்களுக்கு அமைய, எமது அனைத்துக் கொள்கைகளும் மக்களின் நலனை மையமாகக் கொண்டதாகவே அமைகின்றன. அரசுகள் என்ற ரீதியில் மக்கள் நலன்சார் கொள்கைகளுக்கு முன்னுரிமை அளிப்பதில் நாம் உறுதியாக உள்ளோம்.” – என்று இலங்கைக்கான இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜா தெரிவித்தார்.

இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் பாவனைக்காக இந்திய அரசால் அன்பளிப்பாக வழங்கப்பட்ட 134 கப் ரக வாகனங்களை உத்தியோகபூர்வமாகக் கையளிக்கும் விசேட நிகழ்வு, ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் தலைமையில் நேற்று திங்கட்கிழமை ஜனாதிபதி செயலக வளாகத்தில் நடைபெற்றது.

இந்திய உயர் ஸ்தானிகராலயத்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்நிகழ்வில், ஜனாதிபதியுடன் இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு, நாடாளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜயபால உள்ளிட்ட முக்கிய அரச உயர் அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வில் கலந்துகொண்டு ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே இந்தியத் தூதுவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“இலங்கை பொலிஸ் திணைக்களம் விடுத்த விசேட வேண்டுகோளுக்கு இணங்க, கடந்த 2024ஆம் ஆண்டின் இறுதியில் இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டு, 2025 ஜனவரியில் இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் இரு நாடுகளுக்கும் இடையே கைச்சாத்திடப்பட்டது.

நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் இத்திட்டத்தை வெற்றிகரமாக முடிக்க முடிந்ததையிட்டு இந்தியா மகிழ்ச்சியடைகின்றது.

ஆரம்பத்தில் 80 கப் ரக வாகனங்களை மட்டுமே வழங்குவதற்குத் தீர்மானிக்கப்பட்டிருந்தது. எனினும், இரு தரப்பினருக்கும் இடையே நிலவிய மிக நெருக்கமான கூட்டுப் பொறுப்பின் காரணமாக, தற்போது அந்த எண்ணிக்கையை 134 வாகனங்களாக அதிகரித்து வழங்க முடிந்துள்ளது. இது இரு நாடுகளின் சிறந்த ஒத்துழைப்புக்குச் சான்றாகும்.

இலங்கை மற்றும் இந்தியாவுக்கு இடையிலான உறவுகள் வெறும் அரசியல் ரீதியானவை மட்டுமல்ல, அவை வரலாற்று ரீதியான மக்கள் பிணைப்பைக் கொண்டவை.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையும், இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் தொலைநோக்குப் பார்வையும் எமக்கு வழிகாட்டுகின்றன. அந்த வழிகாட்டல்களுக்கு அமைய, எமது அனைத்துக் கொள்கைகளும் மக்களின் நலனை மையமாகக் கொண்டதாகவே அமைகின்றன. அரசுகள் என்ற ரீதியில் மக்கள் நலன்சார் கொள்கைகளுக்கு முன்னுரிமை அளிப்பதில் நாம் உறுதியாக உள்ளோம்.

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நாட்டில் முன்னெடுத்து வரும் தூய்மையான நிர்வாகம் மற்றும் சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்டும் வேலைத்திட்டங்களுக்குத் தேவையான இந்த உதவிகளை வழங்குவதில் இந்தியா பெருமகிழ்ச்சியடைகின்றது.

தற்போது வழங்கப்பட்டுள்ள இந்த புதிய கப் ரக வாகனங்கள் அனைத்தும் உள்ளூர் மற்றும் கிராமிய சமூக மட்டத்திலான காவல் சேவைகளை மேலும் பலப்படுத்தவும், குற்றத்தடுப்பு நடவடிக்கைகளை விரைவுபடுத்தவும் பெரிதும் உதவும் என நம்பப்படுகின்றது. இவ்வாறான காத்திரமான செயற்பாடுகள் ஊடாக இந்தியா மற்றும் இலங்கைக்கிடையிலான நீண்டகால நட்புறவும், மக்களின் பிணைப்பும் எதிர்காலத்தில் மேலும் பலமடையும்.” – என்றும் இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜா தனது உரையில் நம்பிக்கை வெளியிட்டார்.

Leave A Reply

Your email address will not be published.