“நிதி வேண்டாம்; நீதியே வேண்டும்” – வவுனியாவில் உறவுகள் போராட்டம்.
“வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட எங்களுக்கு நிதி உதவி தேவையில்லை; சர்வதேச விசாரணையூடனான நீதியே தேவை” என்று வலியுறுத்தி, வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் இன்று சனிக்கிழமை கவனவீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வவுனியா பழைய பஸ் நிலையத்துக்கு முன்பாக இன்று மதியம் நடைபெற்ற இந்த போராட்டத்தில், காணாமல் ஆக்கப்பட்டோரின் தாயார்மார்கள், மனைவிகள் உள்ளிட்ட 50 இற்கும் மேற்பட்ட உறவினர்கள் கலந்துகொண்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், காணாமல்போன தங்களது உறவினர்களின் புகைப்படங்களைத் கைகளில் ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பினர்.
குறிப்பாக, காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தால் தமக்கு வழங்கப்படுவதாகக் கூறப்படும் இடைக்கால நிதி உதவிகள் எவையும் தேவையில்லை எனவும், சர்வதேச ரீதியிலான நம்பகத்தன்மை மிக்க விசாரணையும், தங்களது உறவினர்களுக்கு என்ன நடந்தது என்ற இறுதி முடிவுமே தமக்கு வேண்டும் எனவும் அவர்கள் இதன்போது வலியுறுத்தினர்.
தங்களது கோரிக்கைகள் அடங்கிய பல்வேறு பதாதைகளைத் தாங்கியவாறு, சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக அமைதியான முறையில் இந்தப் போராட்டத்தை அவர்கள் முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


