உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் வழக்கு: கோட்டா, சுரேஷ் உள்ளிட்ட மூவருக்கு வெளிநாட்டுப் பயணத் தடை விதிப்பு!

உயிர்த்த ஞாயிறு தினக் குண்டுத் தாக்குதல்கள் தொடர்பான குற்றவியல் விசாரணைகளுக்கு அமைய, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் இரண்டு உயர் இராணுவ அதிகாரிகளுக்கு எதிராகக் கோட்டை நீதிவான் நீதிமன்றம் இன்று புதன்கிழமை வெளிநாட்டுப் பயணத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தினக் குண்டுத் தாக்குதல் சம்பவம் தொடர்பில், அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பிரதானியான ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே பிரதான சந்தேகநபராகப் பெயர் குறிப்பிடப்பட்டுள்ள விசேட வழக்கு, இன்று கோட்டை நீதிவான் பசன் அமரசேன முன்னிலையில் விரிவான விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போதே, வழக்கின் குற்றச்சாட்டுகள் மற்றும் புலனாய்வுப் பிரிவினரின் சமர்ப்பிப்புகளை ஆராய்ந்த நீதிவான், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே உள்ளிட்ட மூவருக்கும் எதிராக இந்த வெளிநாட்டுப் பயணத்தடை உத்தரவைப் பிறப்பித்தார்.

அத்துடன், இந்த உத்தரவின் பிரதிகளை உடனடியாகக் குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளருக்கு அனுப்பி வைக்குமாறும் நீதிமன்றப் பதிவாளருக்கு நீதிவான் பசன் அமரசேன கட்டளையிட்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.