2026 ஜி.சீ.ஈ. சாதாரண தரப் பரீட்சைக்கு விண்ணப்பிக்கும் முன் தேசிய அடையாள அட்டையைப் பெற்றுக்கொள்வது கட்டாயம்! – பரீட்சைகள் திணைக்களம் அவசர அறிவிப்பு.

எதிர்வரும் டிசம்பர் மாதம் நடைபெறத் திட்டமிடப்பட்டுள்ள 2026ஆம் ஆண்டுக்கான ஜி.சீ.ஈ. சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றவிருக்கும் மாணவர்கள் அனைவரும், பரீட்சை விண்ணப்பங்கள் கோரப்படுவதற்கு முன்னதாகவே தங்களது தேசிய அடையாள அட்டைகளைப் பெற்றுக்கொள்ளுமாறு பரீட்சைகள் திணைக்களத்தால் அவசரமாகக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

பரீட்சைத் திணைக்களத்தால் நடத்தப்படும் அனைத்துப் பரீட்சைகளுக்கும் விண்ணப்பிக்கும் போது, விண்ணப்பதாரர்கள் தங்களது தேசிய அடையாள அட்டை இலக்கத்தைக் குறிப்பிடுவதைக் கட்டாயமாக்குவதற்குப் பரீட்சைகள் திணைக்களம் நடவடிக்கை எடுத்து வருவதை அடுத்தே இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, 2026 ஜி.சீ.ஈ. சாதாரண தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கோரப்படும் போது மாணவர்கள் எவ்வித அசௌகரியங்களையும் எதிர்கொள்வதைத் தவிர்த்துக்கொள்ளும் பொருட்டு, தகுதியுடைய மாணவர்கள் தாமதமின்றித் தேசிய அடையாள அட்டைகளைப் பெற்றுக்கொள்வதை உறுதிப்படுத்துமாறு அனைத்துப் பாடசாலை அதிபர்களுக்கும் ஏற்கனவே அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

பாடசாலைப் பரீட்சார்த்திகள் மற்றும் தனிப்பட்ட பரீட்சார்த்திகள் என இருதரப்பினரும் பரீட்சைக்கு விண்ணப்பிப்பதற்கு முன்னர், தங்களது தேசிய அடையாள அட்டையைப் பெற்றுக்கொண்டதை உறுதிப்படுத்துவது அவர்களது பொறுப்பாகும் என்றும் பரீட்சைகள் திணைக்களம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.