“அநுர அரசு எங்களை ஏமாற்றிவிட்டது!” – யாழில் சுகாதாரத் தொண்டர்கள் மாபெரும் போராட்டம்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் கடந்த பல வருடங்களாகத் தற்காலிகமாகப் பணியாற்றி வரும் சுகாதாரத் தொண்டர்கள், தமக்கு நீதி கோரி இன்று வெள்ளிக்கிழமை போராட்டத்தை முன்னெடுத்தனர்.

தற்போதைய அநுரகுமார திஸாநாயக்க அரசு தம்மைத் திட்டமிட்டு ஏமாற்றிவிட்டதாகக் குற்றம் சுமத்திய தொண்டர்கள், நாளை சனிக்கிழமை நடைபெறவுள்ள புதிய நியமனங்களுக்கான நேர்முகத் தேர்வை உடனடியாக இடைநிறுத்தி, தமக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

யாழ். போதனா வைத்தியசாலைக்கு முன்பாக இன்று காலை ஆரம்பமான இப்போராட்டத்தைத் தொடர்ந்து, தொண்டர்கள் அங்கிருந்து யாழில் அமைந்துள்ள வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகம் வரை கோஷங்களை எழுப்பியவாறு பேரணியாகச் சென்று தமது போராட்டத்தை நிறைவு செய்தனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட சுகாதாரத் தொண்டர்கள் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில்,

“கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக நிலையான ஊதியம் கூட இன்றி, அர்ப்பணிப்புடன் இச்சேவையை வழங்கி வருகின்றோம். இது தொடர்பாகக் கொழும்பில் உரிய தகுதிவாய்ந்த அமைச்சரைச் சந்தித்துக் கலந்துரையாடிய போது, புதிய நியமனங்கள் வழங்கப்படும் பட்சத்தில் தற்போது தற்காலிக சேவையில் இருக்கும் 120 பேரையும் சேவைக் காலத்தின் அடிப்படையில் நிரந்தரமாக உள்வாங்குவதாக வாக்குறுதி அளித்திருந்தார்.

ஆனால், தற்போது அந்த வாக்குறுதி முற்றிலும் போலியாகிவிட்டது. நாளை நடைபெறவுள்ள நேர்முகத் தேர்வுக்கு 92 பேர் அழைக்கப்பட்டுள்ள நிலையில், தற்காலிக சேவையில் இருந்த 15 பேர் மாத்திரமே அதற்குள் உள்வாங்கப்பட்டுள்ளனர். ஏனைய 77 பேரும் வைத்தியசாலையில் எந்தவொரு சேவையையும் முன்னெடுக்காத, அனுபவமற்ற வெளிநபர்களாகக் காணப்படுகின்றனர்.” – என்று கவலை வெளியிட்டனர்.

அவர்கள் மேலும் குறிப்பிடுகையில், “2019 ஆம் ஆண்டின் சுற்றுநிருபத்தின் பிரகாரம், அதற்கு முந்தைய காலத்தில் 180 நாள்கள் சேவையில் இருந்தவர்கள் மாத்திரமே உள்வாங்கப்படுவர் என்று கூறப்படுகின்றது. ஆனால், நாளை நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்டுள்ளவர்களில் பெரும்பாலானோர் 2000 ஆம் ஆண்டுக்குப் பின் பிறந்த இளம் வயதினராவர். இவர்கள் எந்தச் சுற்றுநிருபத்தின் அடிப்படையில் உள்வாங்கப்பட்டனர் என்பது தெரியவில்லை. இது தற்போதைய அரசின் வெளிப்படையான மோசடியாகும். எனவே, எமக்கான நியமனம் உறுதிப்படுத்தப்படும் வரை நாம் தொடர்ந்தும் போராடுவோம்.” என்றும் எச்சரித்தனர்.

போராட்டம் நடைபெற்ற இடத்துக்குத் தேசிய மக்கள் சக்தியின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான ரஜீவன் மற்றும் இளங்குமரன் ஆகியோர் நேரில் வருகை தந்தனர்.

இந்தப் போராட்டத்தில் ஈடுபட்ட சுகாதாரத் தொண்டர்களின் பிரச்சினைகளைக் கேட்டறிந்த அவர்கள், இது குறித்து உரிய தரப்பினருடன் பேசி விரைந்து நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்துச் சென்றனர்.

Leave A Reply

Your email address will not be published.