செம்மணியில் நாள்தோறும் பேரதிர்ச்சி!

யாழ்ப்பாணம் – செம்மணி மனிதப் புதைகுழியில் முன்னெடுக்கப்பட்டு வரும் அகழ்வுப் பணிகளின் போது, நேற்று வெள்ளிக்கிழமை 3 சிறுவர்களுடைய எலும்புக்கூட்டுத் தொகுதிகள் உட்பட மேலும் 11 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.

செம்மணி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணியின் 17 ஆம் நாள் அகழ்வுப் பணிகள் நேற்று வெள்ளிக்கிழமை முன்னெடுக்கப்பட்டன.

இதன்போது, மொத்தம் 13 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் புதிதாக அடையாளம் காணப்பட்ட நிலையில், ஏற்கனவே அடையாளம் காணப்பட்டிருந்த எலும்புக்கூட்டுத் தொகுதிகளிலிருந்து சிறுவர்களுடைய மூன்று எலும்புக்கூடுகள் உட்பட 11 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் நேற்று தோண்டி எடுக்கப்பட்டன.

இதன்படி, செம்மணி மனிதப் புதைகுழியில் இதுவரையில் நடத்தப்பட்ட அகழ்வுப் பணிகளின் போது ஒட்டுமொத்தமாக 296 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவற்றுள் 290 எலும்புக்கூடுகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, நேற்று நடைபெற்ற அகழ்வுப் பணிகளின் போது எலும்புக்கூடு ஒன்றுடன் காணப்பட்ட தகர வடிவிலான பொருள் ஒன்று மீட்கப்பட்டு, அது நீதிமன்ற சான்றுப்பொருளாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இன்று சனிக்கிழமை அகழ்வுப் பணிகள் இடம்பெறாது எனவும், நாளை ஞாயிற்றுக்கிழமை மீண்டும் அகழ்வுப் பணிகள் தொடரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.