தைரியமிருந்தால் தேர்தலை நடத்துங்கள்! – அரசுக்கு ரஞ்சித் மத்தும பண்டார சவால்.

ஆளுங்கட்சியானது தேர்தலை நடத்துவதற்கு அஞ்சி, கிராமங்களுக்குள் கூடச் செல்ல முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது என்றும், அரசாங்கத்திற்குத் தைரியமிருந்தால் உடனடியாக மாகாண சபைத் தேர்தலை நடத்தி மக்களின் உண்மையான ஆதரவை அளவிட்டுக் காட்டுமாறும் ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார சவால் விடுத்துள்ளார்.

கொழும்பிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தி அலுவலகத்தில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இவ்வாறு சவால் விடுத்தார்.

அவர் மேலும் கூறியதாவது:-

“டொலரின் பெறுமதியைக் கட்டுப்படுத்தியதாக அரசாங்கம் கூறிக்கொள்கிறது. ஆனால், இன்று டொலரின் பெறுமதி 348 ரூபாவையும் தாண்டிச் சென்றுள்ளது. இதன் காரணமாக நாட்டுக்கு இறக்குமதி செய்யப்படும் சீனி, பருப்பு, பால்மா உள்ளிட்ட அனைத்து அத்தியாவசியப் பொருட்களின் விலைகளும் சுமார் நூறு சதவீதத்தால் அதிகரித்துள்ளன. அரசாங்கத்தால் டொலர் பெறுமதி உயர்வைத் தடுத்து நிறுத்த முடியவில்லை.

அதுமாத்திரமின்றி, எமது நாட்டின் பிரதான ஏற்றுமதித் துறையான ஆடைத் தொழில்துறைக்கு அமெரிக்கா சில மாதங்களுக்கு முன்னர் 20 சதவீத வரியை விதித்திருந்ததுடன், கடந்த வாரம் மேலும் 12.5 சதவீத வரியை விதித்துள்ளது. இதைப் பற்றி அரசாங்கத்தில் எவரும் பேசுவதில்லை. ஆடைத் துறை மட்டுமன்றி, எமது நாட்டின் இறப்பர் பாலில் இருந்து தயாரிக்கப்படும் தயாரிப்புகளையும் அமெரிக்காவே அதிகம் கொள்வனவு செய்கிறது. புதிய வரி விதிப்பால் நாட்டின் இறப்பர் விலைக்கும் ஆடைத் தொழில்துறைக்கும் பெரும் ஆபத்து ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.

அரசாங்கம் இவற்றை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்றது. டொலர் பெறுமதியைக் குறைக்க வேண்டுமாயின் எமது ஏற்றுமதியை அதிகரிக்க வேண்டும். ஆனால் தற்போது எமது ஏற்றுமதி வீழ்ச்சியடைந்துள்ளது. அரசாங்கமோ தேசிய உற்பத்தி வருமானம் அதிகரித்துள்ளதாகப் பொய்ப் பிரசாரம் செய்கிறது. அவ்வாறு வருமானம் அதிகரித்திருந்தால் மக்களுக்கு எரிபொருள் மானியத்தையாவது வழங்கியிருக்க வேண்டுமல்லவா?

அரசாங்கத்துக்குத் தைரியம் இருந்தால் இப்போது மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு சவால் விடுக்கின்றோம். ஜனாதிபதித் தேர்தலில் அநுரகுமார திஸாநாயக்க 43 சதவீத வாக்குகளையே பெற்றார். அதன் பின்னர் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் சற்று அதிக வாக்குகளைப் பெற்றிருந்தாலும், சில மாதங்களுக்குப் பின்னர் நடந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் அது 40 சதவீதமாகக் குறைந்தது.

இன்று மாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட்டால் இவர்கள் 20 சதவீதத்திற்கும் குறைவான வாக்குகளையே பெறுவார்கள். தகுந்த காலத்தில் உள்ளூராட்சி மன்ற மற்றும் மாகாண சபைத் தேர்தல்களைத் தங்களது முதலாம் ஆண்டு ஆட்சிக் காலத்திற்குள் நடத்துவதாகத் தேசிய மக்கள் சக்தியின் கொள்கைப் பிரகடனத்தில் கூறப்பட்டிருந்தது. ஆனால், இன்று இவர்களால் தேர்தலை நடத்த முடியாது. மக்கள் எதிர்ப்பின் காரணமாக ஒரு கிராமத்திற்குள் கூடச் செல்ல முடியாத நிலை இவர்களுக்கு ஏற்பட்டுள்ளது.” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.