உடல்நிலை மோசம்; உயில் எழுதத் தயார் சுரேஷ் சலேயின் மனைவி மனோரி கண்ணீர் பேட்டி.

“கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள போதிலும், தனது சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தில் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே உறுதியாக உள்ளார். அவர் ஒரு துளி தண்ணீர் கூட அருந்த மறுப்பதால் உடல்நிலை மிக மோசமடைந்துள்ளதுடன், இறுதி உயிலை எழுதுவதற்கும் தனது கண்களைத் தானம் செய்வதற்கும் தயாராகியுள்ளார்” என்று அவரது மனைவி மனோரி சலே தெரிவித்தார்.

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள தனது கணவரை நேற்று நேரில் சென்று பார்வையிட்ட பின்னர், ஊடகங்களுக்குக் கருத்து வெளியிடும் போதே அவர் இந்தத் தகவல்களை வெளியிட்டார்.

அவர் மேலும் ஊடகங்களிடம் கண்ணீருடன் தெரிவிக்கையில்,

“என் கணவரை நான் வைத்தியசாலைக்குச் சென்று பார்த்தேன். ஆனால், பாதுகாப்பு காரணங்களைக் கூறி அவரை நெருங்குவதற்கு எனக்கு அனுமதி வழங்கப்படவில்லை. தூரத்திலிருந்து பார்த்த போது அவரது நிலைமை மிகவும் கவலைக்கிடமாகவே உள்ளது தெரியவந்தது.

கடந்த இரண்டு நாள்களாக அவர் எதையும் சாப்பிடவில்லை, ஒரு துளி தண்ணீர் கூட அருந்தவில்லை. இதனால் அவரது உடல் கடுமையான நீரிழப்புக்கு உள்ளாகியுள்ளது. தற்போது அவரது இரண்டு கைகளிலும் சேலைன் ஏற்றப்பட்டுள்ளதுடன், தீவிர மருத்துவப் பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இவ்வாறானதொரு நேர்மையான மனிதருக்கு இப்படி ஒரு நிலைமை ஏற்பட்டுள்ளதைக் கண்டு குடும்பத்தினராகிய நாம் மிகவும் மனவேதனையடைகின்றோம். வைத்தியர்கள் தற்போது அவருக்குத் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். ஆனால், அவர் கடுமையான மன உளைச்சலில் உள்ளதால், தனக்கு வழங்கப்படும் சிகிச்சைகள் அனைத்தையும் ஆரம்பத்தில் நிராகரித்து வந்தார். இன்று (நேற்று) காலையில்கூட அவரால் சுய நினைவோடு எழுந்து நிற்க முடியாத சூழலே காணப்பட்டது.

நாங்கள் எவ்வளவோ எடுத்துக்கூறியும், தற்போதைய அரசியல் பழிவாங்கல்களுக்கு எதிராகத் தான் ஆரம்பித்துள்ள உண்ணாவிரதப் போராட்டத்தைக் கைவிடுவதற்கு அவர் சம்மதிக்கவில்லை. சாகும் வரை இந்த போராட்டத்தைத் தொடர்வதிலேயே அவர் உறுதியாக உள்ளார். அதனால்தான், தான் இறந்த பின்னர் தனது கண்களைத் தானம் செய்வதற்கும், இறுதி உயிலை எழுதுவதற்கும் தனது சட்டத்தரணியை உடனே வைத்தியசாலைக்கு வருமாறு அவர் அவசரமாக அழைத்துள்ளார்.

தற்போது அவரது நிலைமை மிக மோசமாக இருப்பதாலேயே, ஆயுதம் தாங்கிய விசேட அதிரடிப் படையினரின் பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டு அவர் தனியாக வைக்கப்பட்டுள்ளார்.” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.