ஐ.நா.வின் டித்வா மனிதாபிமானத் திட்டம் வெற்றிகரமாக நிறைவு! – இலங்கையின் அனர்த்த முகாமைத்துவத்திற்கு சர்வதேச ஒருங்கிணைப்பாளர் பாராட்டு.

டித்வா சூறாவளியினால் பாதிக்கப்பட்டவர்களுக்காக ஐக்கிய நாடுகள் சபையினால் நடைமுறைப்படுத்தப்பட்ட மனிதாபிமான முன்னுரிமைத் திட்டத்தின் நிறைவு விழா, அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகமும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான பிரபாத் சந்திரகீர்த்தி மற்றும் இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க்-ஆண்ட்ரே பிரான்சே ஆகியோரின் தலைமையில் நேற்று கொழும்பில் நடைபெற்றது.

இங்கு உரையாற்றிய ஐ.நா. வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க்-ஆண்ட்ரே பிரான்சே, “வலுவான அரசியல் தலைமைத்துவம் மற்றும் அனர்த்த நிலைமையினை விரைவாக முகாமைத்துவம் செய்தல் ஆகியவை காரணமாகவே, டித்வா சூறாவளியினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான மனிதாபிமான நிவாரணத் திட்டத்தை இலங்கையில் வெற்றிகரமாகச் செயல்படுத்த முடிந்தது” எனச் சுட்டிக்காட்டினார்.

அதனைத் தொடர்ந்து உரையாற்றிய அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் பிரபாத் சந்திரகீர்த்தி, “வலுவான தேசிய தலைமைத்துவம் மற்றும் பயனுள்ள கூட்டாண்மை மூலம், நெருக்கடியான சூழ்நிலையிலும் மக்களுக்கு மிகவும் நியாயமான முறையிலும் செயற்திறனாகவும் நிவாரணம் வழங்க முடியும் என்பதை இலங்கை நிரூபித்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபை விரைவாக வழங்கிய துல்லியமான தரவுகள் மற்றும் மதிப்பீடுகள் மக்களுக்கு உடனடி நிவாரணம் வழங்குவதற்கு முக்கியமானதாக அமைந்தன.

எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய இவ்வாறான இயற்கை அனர்த்தங்களை எதிர்கொள்வதற்காக பன்முகப்படுத்தப்பட்ட முன்கூட்டிய எச்சரிக்கை கட்டமைப்புகளை வலுப்படுத்தவும், தேசிய, மாகாண மற்றும் பிரதேச மட்டங்களில் நிறுவன ரீதியான ஒருங்கிணைப்பை மேலும் விரிவுபடுத்தவும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகின்றது” எனக் குறிப்பிட்டார். அத்துடன், இந்நெருக்கடி காலத்தில் தாராளமாக உதவிய பல்வேறு நாடுகளுக்கும், அர்ப்பணிப்புடன் பணியாற்றிய அரச நிறுவனங்களுக்கும் அவர் தனது நன்றியைத் தெரிவித்தார்.

பாதிக்கப்பட்டோருக்கு தலா 27,000 ரூபா கொடுப்பனவு
ஐக்கிய நாடுகள் சபையின் “டித்வா மனிதாபிமான முன்னுரிமைத் திட்டத்தின்” கீழ், பாதிக்கப்பட்டவர்களுக்காக 35.4 மில்லியன் டொலர்களைச் சேகரிக்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டிருந்தது. அந்தத் தொகையில் 75 சதவீதத்திற்கும் அதிகமான நிவாரண உதவிகள் இந்நாட்டில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளன. இதன் கீழ் பாதிக்கப்பட்ட ஒரு குடும்பத்திற்காகப் பிரதேச செயலகங்கள் ஊடாக 27,000 ரூபா கொடுப்பனவும், தற்காலிக வீடுகளை அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு நிவாரண உதவிகளும் நடைமுறைப்படுத்தப்பட்டன.

இந்த மனிதாபிமான திட்டத்தின் கீழ் நாட்டின் 25 மாவட்டங்களையும் உள்ளடக்கும் வகையில் 09 துறைகளின் ஊடாக மக்களுக்கு நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. இதன் போது இலக்கு வைக்கப்பட்ட 6.5 இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் தொகையில் 87 சதவீதம் பேருக்கு, அதாவது 5,75,000 பேருக்கு நேரடியாக நிவாரணம் வழங்க முடிந்துள்ளதாக உத்தியோகபூர்வ அறிக்கைகள் சுட்டிக்காட்டியுள்ளன.

இந்நிகழ்வில் பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளர் (அனர்த்த முகாமைத்துவம்) கே. ஜி. தர்மதிலக, வெளிநாட்டுத் தூதுவர்கள், உயர்ஸ்தானிகர்கள், ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் (UNDP) பிரதிநிதிகள், உலக சுகாதார அமைப்பின் (WHO) பிரதிநிதிகள் மற்றும் சர்வதேச நிவாரண அமைப்புகளின் உள்நாட்டு, வெளிநாட்டுப் பிரதிநிதிகள் பலர் கலந்துகொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.