பழைய ஃபோனை சிசிடிவி கேமராவாக மாத்தலாம்

பழைய பொருட்களையெல்லாம் தட்டி துடைச்சி கடைசி துரும்பு வரைக்கும் பயன்படுத்துற நம்மாளுங்க, போன்ல மட்டும் சின்ன கீறல் விழுந்தாலே அய்யோ போச்சேன்னு அடுத்த நிமிஷம் அதை ஆன்லைன் எக்ஸ்சேஞ்ச்ல போட்டு புது ஃபோன் ஆர்டர் பண்ணிருவாங்க. அந்தளவுக்கு தினந்தோறும் புதுப் புது வசதிகளோட ஃபோன்கள் வந்துட்டே இருக்கு. ஆனாலும் கூட்டிக்கழிச்சி பார்த்தா, எக்ஸ்சேஞ்ச்ல பழைய ஃபோனை கொடுக்கும்போது உங்களுக்கு நஷ்டம் தான். நஷ்டம்னு தெரிஞ்சி பழைய ஃபோனை கொடுக்குறத விட, அதை அதிநவீன சாதனங்களா மாத்தி அன்றாடம் பயன்படுத்தலாம் தெரியுமா….?! எப்படீன்னு பார்க்கலாம் வாங்க…

டேட்டா பேக்கப் சாதனமாகும் பழைய ஃபோன்

உங்க பழைய ஸ்மார்ட் ஃபோன் வேலை செய்யிற கண்டிஷன்ல இருக்கா…அது போதும், அதை டேட்டா பேக்கப் எடுத்து வைக்கிற சாதனமாக்கிக்கலாம். பழைய ஃபோன்ல ஃபேக்டரி ரீசெட் கொடுத்து எல்லா டேட்டாக்களையும் சுத்தமாக்கிடுங்க. பிறகு புது ஃபோனில் சேமிக்கப்படும் எல்லா முக்கிய விஷயங்களையும் இந்த ஃபோன்ல ஒரு பேக்கப் எடுத்து வச்சிக்கங்க. முடிஞ்சா, பழைய ஃபோன்ல சில க்ளவுட் டேட்டா சேமிக்கும் அப்ளிகேஷன்களை இன்ஸ்டால் பண்ணிக்கிட்டு, அதை புது ஃபோன்ல இருக்குற க்ளவுட் அப்ளிகேஷன்களோட நெட்வொர்க் பண்ணிக்கலாம்.

பழைய ஃபோனை ஜிபிஎஸ் மற்றும் எம்பி3 பிளேயராக்கலாம்!

காரில் புது இடங்களுக்கு போகும்போதோ, நீண்ட பயணம் புறப்படும்போதோ, மொபைல் ஃபோன் மூலமா ரெண்டு விஷயங்களை கண்டிப்பாக செய்வோம். ஒண்ணு, ப்ளூடூத் மூலமா ஃபோன்ல உள்ள பாடல்களை கேட்போம், ரெண்டாவது, மேப் மூலமா போகும் வழி பார்த்து பயணிப்போம். இந்த ரெண்டு விஷயத்துக்கும் பழைய ஸ்மார்ட் ஃபோனை பயன்படுத்தலாம். பிடித்தமான பாடல்கள் நிறைய சேமிச்சி, முழுமையாக கேட்கலாம், தடையில்லாம ஜிபிஎஸ் சாதனமாக மாத்திக்கலாம். இதனால, புது ஃபோன்களுக்கு அதிக வேலையிருக்காது, சார்ஜ் குறையாது. தடையில்லாம கால்களை அட்டெண்ட் பண்ணலாம். நிறைய பாடல்களை புது ஃபோன்ல சேமிச்சி இடத்தை அடைக்கத் தேவையில்லை.

3. பழைய ஃபோனை சிசிடிவி கேமராவா மாத்தலாம்

வீட்டுக்கு செங்கல், சிமெண்ட் மாதிரி சிசிடிவி இல்லாம வீடு கிடையாதுங்கற சூழல் உருவாகிடுச்சி. குறிப்பா வேலைக்கு போற பெற்றோர், தங்களோட குழந்தை வீட்டுல என்ன செய்யிதுன்னு தெரிஞ்சிக்க இப்போ வீட்டுல கேமரா வச்சி, அதை ஆப் மூலமா மொபைல் ஃபோன்ல பார்க்குறாங்க. இதையே நாமளும் நம்ம பழைய ஸ்மார்ட் ஃபோன் மூலமா செலவில்லாம செய்யலாம். இதுக்கு, பழைய ஃபோன்லயும் புது ஃபோன்லயும் குறிப்பிட்ட சில ஆப்களை இன்ஸ்டால் செய்யணும். டோர்மி அப்படீங்கற ஆப் நல்லா இருக்குன்னு பயன்படுத்துறவங்க சொல்றாங்க. இந்த வகை ஆப்பை இன்ஸ்டால் செய்துட்டு, கேமரா ஆன் பண்ணிட்டு வீட்டுல எங்கே தேவையோ அங்க வச்சிடணும். பிறகு புது ஃபோன்ல குறிப்பிட்ட ஆப் திறந்து, வீட்டுல என்ன நடக்குதுன்னு லைவ் ஆக பார்க்கலாம். வீடியோ பார்த்துட்டே இதே ஆப் மூலமா பேசவும் செய்யலாம்.
இதையெல்லாம் தாண்டி உங்க ஃபோன்ல இனி எதுவுமே செய்ய முடியாதுங்கற நிலைமை வந்ததும், அதை அப்படியே மேஜைக்கு அடியிலயோ, பீரோவுக்குள்ளேயோ போட்டு வச்சி மின்-குப்பைகளை சேர்க்காதீங்க. மின் கழிவுகளை சேகரிக்கிறதுக்குன்னே சில அமைப்புகள், நிறுவனங்கள் இருக்கு. அவங்க கிட்ட உங்ககிட்ட சேரும் எலெக்ட்ரானிக்ஸ் கழிவுகளை கொடுத்துடுங்க.

– Premkumar Asogan
நன்றி: சகோதர நிறுவனம் : கரிசல் மீடியா

Comments are closed.