பதவிகளைக் காப்பாற்ற இரகசிய தேசிய மாநாடா? ரெலோவின் தலைமைக்கு எதிராக மூத்த உறுப்பினர்கள் போர்க்கொடி!

ரெலோ (தமிழீழ விடுதலை இயக்கம்) அமைப்பின் தலைமைக்கு எதிராகப் பல மூத்த போராளிகள் மற்றும் கட்சி உறுப்பினர்கள் கடுமையான எதிர்ப்புகளை வெளியிட்டு வரும் நிலையில், கட்சியின் தேசிய மாநாட்டை இரகசியமாக நடத்தித் தங்களது பதவிகளைக் காப்பாற்றிக் கொள்ளத் தலைமைப்பீடம் ஜனநாயக விரோத நகர்வுகளை மேற்கொண்டுள்ளது என்று கட்சியின் மூத்த உறுப்பினர்கள் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளனர்.

யாழ். ஊடக அமையத்தில் நேற்று சனிக்கிழமை நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் மாநாட்டின் போதே அவர்கள் இதனைத் தெரிவித்துள்ளனர்.

அங்கு அவர்கள் மேலும் கூறுகையில்,

“கட்சித் தலைமையின் தன்னிச்சையான அரசியல் தீர்மானங்கள், நிர்வாகச் சீர்கேடு, தொடர்ச்சியான தேர்தல் தோல்விகள் மற்றும் தவறான கூட்டணிகள் காரணமாகக் கட்சி கடுமையான பின்னடைவைச் சந்தித்துள்ளதுடன், மக்கள் மத்தியில் செல்வாக்கை இழந்துள்ளது. இதனால் உறுப்பினர்கள் மத்தியில் பெரும் அதிருப்தி ஏற்பட்டு பலர் கட்சியிலிருந்து வெளியேறி வருகின்றனர். கட்சியின் நீண்ட வரலாற்றில், போராளிகளும் அங்கத்தவர்களும் தலைமைக்கு எதிராக வீதியில் இறங்கிப் போராடும் துரதிர்ஷ்டவசமான நிலை ஏற்பட்டுள்ளது.

கடந்த மார்ச் 21 அன்று வவுனியாவிலும், ஏப்ரல் 25 அன்று திருகோணமலையிலும் நடைபெற்ற தலைமைக் குழுக் கூட்டங்களில், எமது கடும் எதிர்ப்பையும் மீறித் தங்களது பதவிகள் பறிபோய்விடும் என்ற பீதியில் மாநாட்டைப் பிற்போடக் கட்சியின் தலைமைப்பீடத்தினர் தீர்மானித்தனர். அத்துடன், ஏற்கனவே எட்டு மாவட்டங்களில் முறையாக நடத்தப்பட்ட தெரிவுகளை இரத்துச் செய்து, புதிதாகப் பொதுக்குழு உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்க முடிவெடுத்தனர். இது கட்சி யாப்புக்கும் ஜனநாயகக் கோட்பாடுகளுக்கும் முற்றிலும் முரணானதாகும்.

அண்மையில் மன்னார், முல்லைத்தீவு தவிர்ந்த ஏனைய ஆறு மாவட்டங்களிலும் தலைவர் மற்றும் செயலாளர் ஆகிய இருவரும் தமக்கு ஆதரவானவர்களை மட்டும் இரகசியமாக அழைத்து புதிய உறுப்பினர்களைத் தெரிவு செய்துள்ளனர். தத்தம் பதவிகளைத் தக்கவைப்பதற்காக, பதவி வெறியில் செய்யும் இந்த அதிகார துஷ்பிரயோகம் மற்றும் கோழைத்தனமான செயல் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல. இது கட்சியையே அழிக்கும் செயற்பாடாகும்.

நாளை (இன்று) ஞாயிற்றுக்கிழமை தேசிய மாநாடு என்ற போர்வையில் ஒரு கூட்டத்தை நடத்தி, தமக்குச் சாதகமாக நிர்வாகத் தெரிவுகளை மேற்கொள்ளத் தலைமைப்பீடம் திட்டமிட்டுள்ளது என்று அறிகின்றோம்.

அண்மைக்காலமாகக் கட்சி பலத்த பின்னடைவுகளைச் சந்தித்தமைக்குக் கட்சித் தலைவரின் சுய ஒழுக்கம் சார்ந்த பிரச்சினையே மூலகாரணமாகும். கட்சியின் முன்னாள் பெண் உறுப்பினர் ஒருவருடன் அவர் கொண்டிருந்த பாலியல் ரீதியான தகாத உறவுச் செய்திகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி கட்சிக்கு அவமானத்தை ஏற்படுத்தின. இதன் வெளிப்பாடாகவே திருகோணமலை வெலிக்கடை தியாகிகள் அரங்கின் முன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதனைச் செயலாளர் உள்ளிட்ட சிலர் பூசி மெழுகித் தலைமையைக் காப்பாற்ற முயன்றமை கட்சிக்குள் பெரும் அதிர்வலைகளைத் தோற்றுவித்தது.

முன்னதாக, இந்த விடயம் தொடர்பில் கட்சியின் உப தலைவருடன் பேசிய தலைவர் தன் தவறை ஏற்றுக்கொண்டதுடன், தான் எதிர்காலத்தில் எந்தவொரு பதவியையும் ஏற்கப்போவதில்லை எனத் தலைமைக் குழுவிலும் உறுதியளித்திருந்தார். ஆனால், தற்போது மீண்டும் பதவியைத் தக்கவைக்கத் தலைவரும் செயலாளரும் எடுக்கும் முயற்சிகளினாலேயே கட்சிக்குள் பிளவுகள் ஏற்பட்டுள்ளன. இந்தப் பிரச்சினைகளுக்கு அவர்களே முழுமையாகப் பொறுப்புக்கூற வேண்டும்.” – என்றனர்.

நேற்றைய ஊடகவியலாளர் மாநாட்டில் ரெலோ கட்சியின் தலைமைக் குழு உறுப்பினரும் யாழ். மாவட்ட செயலாளருமான சபா குகதாஸ், தலைமைக் குழு உறுப்பினரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எஸ். வினோநோகராதலிங்கம், கட்சியின் தேசிய அமைப்பாளர் பிரசன்னா இந்திரகுமார், உப தலைவர் ஹென்றி மகேந்திரன் மற்றும் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் புவனேஸ்வரன் ஆகியோர் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.