சுரேஷ் சலேவுக்கு மரண தண்டனை விதித்தாலும் எதிரொலிக்கமாட்டோம் – ஆனால் பழிவாங்கக் கூடாது என்கிறார் அஜித் மானப்பெரும.

அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலேவின் விவகாரத்தில் தற்போதைய அரசு முற்றிலும் நீதியான முறையில் சட்டங்களை அமுல்படுத்த வேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர் அஜித் மானப்பெரும தெரிவித்தா ர்.

இது தொடர்பில் அவர் ஊடகங்களுக்கு மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

“அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலேவைக் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்துவதிலோ அல்லது அவரிடம் விரிவான விசாரணைகளை முன்னெடுப்பதிலோ எமக்கு எவ்விதப் பிரச்சினையும் இல்லை. ஆனால், இந்த விசாரணைகள் அனைத்தும் பழிவாங்கல் நோக்கின்றி, முற்றிலும் நீதியான முறையில் நடத்தப்பட வேண்டியது அவசியமாகும்.

முறையான மற்றும் நீதியான விசாரணைகளின் ஊடாக சுரேஷ் சலேவுக்கு நீதிமன்றம் மரண தண்டனை விதித்தால்கூட அதனை நாங்கள் எதிர்க்க மாட்டோம். அதற்கு எமது முழுமையான ஆதரவு உண்டு.

இருப்பினும், நாட்டின் சட்டதிட்டங்களின்படி சந்தேகநபர் ஒருவரை எவ்விதம் நடத்த வேண்டும் என்பதற்கான தெளிவான விதிமுறைகள் உள்ளன. அந்தச் சட்ட நடைமுறைகளையும் மனித உரிமைகளையும் மீறி எதேச்சதிகாரமாகச் செயற்படுவதற்கு எவருக்கும் அனுமதியில்லை. அத்தகைய சட்ட அத்துமீறல்களையே நாம் வன்மையாக எதிர்க்கின்றோம்.

எனவே, சலேவின் விவகாரத்தில் அரசு சட்டத்துக்குப் புறம்பாகச் செயற்படாது, நீதியான முறையில் நடந்துகொள்ள வேண்டும்.” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.