ஏ – 9 வீதியில் அரங்கேறிய கோர விபத்து பஸ் சக்கரத்தில் நசுங்கி பாடசாலை ஆசிரியை சம்பவ இடத்திலேயே பரிதாபகரமாக மரணம்!
யாழ்ப்பாணம் – கண்டி (ஏ – 9) பிரதான வீதியின் பூனாவை, கும்புகொல்லேவ பகுதியில் இன்று காலை இடம்பெற்ற கோர வீதி விபத்தில் பாடசாலை ஆசிரியை ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இன்று வியாழக்கிழமை காலை, கண்டியிலிருந்து வவுனியா நோக்கிப் பயணித்த இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ் ஒன்று, அதே திசையில் பயணித்த மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதன்போது, மோட்டார் சைக்கிளைச் செலுத்திச் சென்ற ஆசிரியை நிலைதடுமாறி வீதியில் விழுந்தார். அப்போது, பின்னால் வந்த பஸ்ஸின் பின்னாலுள்ள சக்கரம் (டயர்) அவர் மீது ஏறியதில், உடல் நசுங்கி அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
விபத்தில் உயிரிழந்தவர் பூனாவை, கல்கந்தேகம வித்தியாலயத்தில் ஆசிரியையாகப் பணிபுரிந்து வந்த 56 வயதுடைய பெண் என்று பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
விபத்து தொடர்பில் பஸ்ஸின் சாரதி பூனாவை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
