சிசிரிவி காட்சிகளால் வெளிவந்த திடுக்கிடும் உண்மைகள் நுவரெலியாவில் பெண் வைத்தியர் கொடூரப் படுகொலை! தெல்தெனியவில் கைவிடப்பட்ட காரிலிருந்து சடலம் மீட்பு!! – காதலனுக்குப் பொலிஸார் வலைவீச்சு.

நுவரெலியா நகரில் உள்ள தனியார் விடுதியொன்றில் தங்கியிருந்த பெண் வைத்தியர் ஒருவர், கண்டி – தெல்தெனிய வைத்தியசாலைக்கு அருகில் கைவிடப்பட்டிருந்த காரொன்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வெலிகம பகுதியைச் சேர்ந்த 33 வயதுடைய பெண் வைத்தியரே இவ்வாறு நேற்று புதன்கிழமை மாலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இவரைக் கொலை செய்தார் எனக் கருதப்படும் கன்னொருவ பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய அவரது காதலன் தப்பியோடியுள்ளார்.

பொலிஸ் விசாரணைகளின் மூலம் திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

உயிரிழந்த பெண் வைத்தியரும், அவரது காதலனும் கடந்த ஜூன் மாதம் 3ஆம் திகதி நுவரெலியாவுக்குச் சென்று, அங்குள்ள தனியார் விடுதியொன்றில் தங்கியிருந்துள்ளனர். இந்நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை இரவு 10.30 மணியளவில், அவர்கள் தங்கியிருந்த அறையிலிருந்து அந்தப் பெண் மயங்கிய நிலையில் அல்லது உயிரிழந்த நிலையில் நபரொருவரால் தூக்கிச் செல்லப்பட்டு, காரொன்றில் ஏற்றிச் செல்லப்படும் காட்சிகள் அந்த விடுதியின் சிசிரிவி கமராவில் பதிவாகியிருந்தன.

இந்த அதிர்ச்சித் தரும் காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு, பாதிக்கப்பட்ட பெண்ணின் மூத்த சகோதரர் நுவரெலியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றைப் பதிவு செய்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து நுவரெலியா பொலிஸார் விசாரணைகளைத் தீவிரப்படுத்திய போதே, மறுநாள் புதன்கிழமை மாலை கண்டி – தெல்தெனிய வைத்தியசாலைக்கு அருகில் சந்தேகத்துக்குரிய முறையில் நிறுத்தப்பட்டிருந்த காரில் இருந்து மேற்படி பெண் வைத்தியரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

விடுதியில் தங்கியிருந்த போது இவ்விருவருக்கும் இடையே ஏற்பட்ட கடுமையான தனிப்பட்ட வாக்குவாதம் காரணமாக, காதலன் அந்தப் பெண்ணை அறையினுள்ளேயே கொடூரமாகக் கொலை செய்திருக்கலாம் எனப் பொலிஸார் பலமாகச் சந்தேகிக்கின்றனர். அதன் பின்னர் கொலையை மறைப்பதற்காக, சடலத்தைத் தூக்கிச் சென்று காரில் ஏற்றி, நுவரெலியாவிலிருந்து பல கிலோமீற்றர் தொலைவிலுள்ள கண்டி – தெல்தெனிய பகுதிக்குக் கொண்டு வந்து வீசிவிட்டுத் தப்பியோடியுள்ளார் என்பது ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

பெண் வைத்தியருடன் நுவரெலியா விடுதிக்கு வருகை தந்துவிட்டுத் தற்சமயம் தலைமறைவாகியுள்ள பிரதான சந்தேகநபரான காதலனை இதுவரை பொலிஸார் கைது செய்யவில்லை. எனினும், அவரைக் கைது செய்வதற்காக விசேட பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுத் தேடுதல் வேட்டை தீவிரமாக்கப்பட்டுள்ளது.

தற்போது, நுவரெலியா தடயவியல் பொலிஸாரின் உதவியுடன், அவர்கள் இருவரும் தங்கியிருந்த விடுதி அறையில் உள்ள தடயங்கள் மற்றும் சிசிரிவி காட்சிகள் பகுப்பாய்வு செய்யப்பட்டு வருகின்றன. அத்துடன், விடுதி ஊழியர்களின் வாக்குமூலங்கள் பெறப்பட்டு வருவதுடன், சந்தேகநபரின் நடமாட்டத்தைக் கண்டறிய அவர்களின் தொலைபேசி அழைப்புத் தரவுகளும் சேகரிக்கப்பட்டு விசாரணைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

Leave A Reply

Your email address will not be published.