மிகப் பலவீனமான ‘பட்ஜட்’டையே முன்வைத்துள்ளது ராஜபக்ச அரசு போட்டுத் தாக்குகின்றார். சுமந்திரன்.

மிகப் பலவீனமான ‘பட்ஜட்’டையே
முன்வைத்துள்ளது ராஜபக்ச அரசு
போட்டுத் தாக்குகின்றார் சுமந்திரன் எம்.பி.

மிகவும் பலவீனமான வரவு – செலவுத்திட்டத்தையே ராஜபக்ச அரசு நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

ராஜபக்ச அரசு முன்வைத்துள்ள 2021ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாட்டைத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“அரசு முன்வைத்துள்ள 2021 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டமானது அரசின் மோசமான நிலைமைகளை வெளிப்படுத்துகின்றது. நாடு பாரிய கடன் நெருக்கடியில் உள்ள நிலையில், எமது சர்வதேசக் கடன்கள் எல்லை மீறிய ஒன்றாகக் காணப்படுகின்ற நிலையில் அதனைச் சமாளிக்கும் வரவு – செலவுத்திட்டமாக அல்லாது மேலும் கடன்களை வாங்கும் வரவு – செலவுத்திட்டமாகவே இது அமைந்துள்ளது என்பதே எமது நிலைப்பாடாகும்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ச தனது வரவு – செலவுத்திட்ட உரையை நிறைவு செய்யும் வேளையில் நாட்டை துரித அபிவிருத்தியின் பக்கம் கொண்டு செல்லும் நோக்கத்தைக் கொண்டுள்ளோம் எனக் கூறினார். ஆனால், இப்போதுள்ள நிலையில் நாட்டை அபிவிருத்தி செய்வதை விடவும் கடன்களில் இருந்து மீளவே போராட வேண்டியுள்ளது என்பதே உண்மையாகும்.

எனவே, மக்களைத் தொடர்ந்தும் ஏமாற்றும் வரவு – செலவு திட்டமொன்றை இன்று அரசு முன்வைத்துள்ளது.

இன்று பல பிரச்சினைகளுக்கு நாடு முகங்கொடுக்க நேர்ந்துள்ள நிலையில் அவற்றை எதிர்கொள்ள, சவால்களை வெற்றிகொள்ள இந்த வரவு  செலவுத்திட்டம் இயலுமான ஒன்றாக இல்லை என்பதே தமிழ்த் தேசியக் கூட்டமைபின் நிலைப்பாடு” – என்றார்

Leave A Reply

Your email address will not be published.