வடக்கு – கிழக்கு மாகாண சபைப் பொறுப்புகளை போராளிகளிடம் ஒப்படையுங்கள் – கிளிநொச்சி நிகழ்வில் சிறீதரன் எம்.பி. வேண்டுகோள்.

https://web.facebook.com/reel/1566884741700335

“நாம் அனைவரும் ஒற்றுமையாக இணைந்து, வடக்கு – கிழக்கு மாகாண சபையின் பொறுப்புகளைப் போராளிகளிடம் ஒப்படைத்து, சிறந்ததொரு அரசியல் சூழலை உருவாக்குவதற்கும், அதற்காக முன்னின்று உழைப்பதற்கும் நான் தயாராக இருக்கின்றேன். இத்தகைய வரலாற்றுப் பணியைச் செய்ய எல்லோரும் தயாரா?”

இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாணம் – கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார்.

கிளிநொச்சியில் போராளிகள் நலன்புரிச் சங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட விசேட விருது வழங்கல் விழாவில் முதன்மை விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

ஆளுமையுள்ள போராளிகளை வெறுமனவே அரசியலுக்குப் பயன்படுத்துவதோ அல்லது தேர்தல் காலங்களில் வாக்குக் கேட்பதற்கான கருவிகளாக மாற்றுவதோ எமது நோக்கமல்ல என்று சுட்டிக்காட்டிய சிறீதரன் எம்.பி. மேலும் உரையாற்றுகையில்,

“போராளிகளை மீண்டும் இந்த மண்ணின் உண்மையான பங்காளிகளாக, நம்முடைய தலைவர்களாக மாற்ற வேண்டும். அவர்கள் போர்க்களங்களில் நின்று எந்த இலட்சியத்துக்காகப் போராடினார்களோ, அதனை இப்போதும் செய்யட்டும்.

2010ஆம் ஆண்டுகளிலும் அதற்குப் பிற்பட்ட காலப்பகுதிகளிலும், “முன்னாள் போராளிகள்” என்று தங்களை அடையாளப்படுத்திக் கொள்வதற்கே அச்சமடைந்த ஒரு சூழ்நிலை இந்நாட்டில் நிலவியது. ஆனால், அத்தகைய அச்சம் நிறைந்த காலங்கள் கடந்து, இன்று “நாங்கள் போராளிகள்” என்று பெருமையோடு மார்பு தட்டிச் சொல்லும் அளவுக்கு ஒரு புதிய காலமும் சக்தியும் பிறந்துள்ளது.

சர்வதேச சமூகம் நம் பக்கம் தன் கவனத்தைத் திருப்பி, பிரத்தியேக அக்கறை செலுத்துவதற்கும் மிக முக்கிய காரணம் போராளிகள்தான்.

யுத்தம் நிறைவடைந்த பின்பும், போராளிகள் தங்களின் தலைமைத்துவப் பண்புகளைத் தக்கவைத்துக் கொண்டு, சமூகத்தில் உயர் பதவிகளை வகிப்பவர்களாகத் திகழ்கின்றார்கள். இதுதான் எமது தலைவரின் தனித்துவமான வளர்ப்புக்குச் சான்றாகும்.

இருப்பினும், பயங்கரவாதத் தடைச் சட்டமும், அரசின் சட்டத்துறையும் போராளிகள் மீதும், தமிழ் மக்கள் மீதும் இன்னமும் தன் அடக்குமுறைகளைப் பாய்ச்சிக் கொண்டுதான் இருக்கின்றன.

தற்போது போராளிகள் நலன்புரிச் சங்கத்தின் பணிகள் விரிவடைந்து வளர்ச்சியடைந்துள்ளன. எனவே, புலம்பெயர்ந்து வாழும் நமது உறவுகள் அனைவரும் ஒற்றுமையாக முன்வந்து, இந்த நலன்புரிச் சங்கத்தின் ஊடாகப் போராளிகளின் குடும்பங்களை பொருளாதார ரீதியாகவும் சமூக ரீதியாகவும் வலுப்படுத்த உதவ வேண்டும்.

நமக்காகப் போராடியவர்களை, ‘எங்களைக் கொல்ல வந்தார்கள்’ என்று பழிசுமத்தி நாமே சிறைக்கு அனுப்பி வைத்திருக்கின்றோம். ஆனால் இன்று, அதே போராளிகளை முன்னிறுத்தி, அவர்களுக்கு முன்னால் நின்று கொண்டு, ‘இது உங்கள் கட்சி, அண்ணன் காட்டிய சின்னம்’ எனச் சிலர் சுயநல அரசியல் பிழைப்பு நடத்துகின்றார்கள். இதனை நாம் எவ்வாறு சகித்துக் கொள்வது? மக்கள் எங்களை விட்டு விலகிப் போவதற்கு இத்தகைய போலித்தனமான அரசியலே முதன்மைக் காரணமாகும்.

நான் நெஞ்சை நிமிர்த்திச் சொல்வேன், கிளிநொச்சியில் உள்ள 40 வட்டாரங்களில், 13 வட்டாரங்கள் இன்று போராளிகளின் கைகளில்தான் உள்ளன. அவர்களின் குடும்பங்களை மையப்படுத்தியே நாம் எமது அரசியலை முன்னெடுத்து வருகின்றோம். கிளிநொச்சி மண் இன்று நிமிர்ந்து நிற்கின்றது என்றால், அதற்கு மாவீரர்களது தியாகமும், போராளிகள் சிந்திய இரத்தமுமே காரணம். எனவே, போராளிகள் எமது சமூகத்தைத் தலைமை தாங்கட்டும். நாங்கள் அனைவரும் ஒன்றாக இணைந்து எமது அரசியலை மேற்கொள்வோம்.” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.