சோமவன்சவை அழைத்து வந்து செம்மணியில் அகழ்வு நடத்துக! – சுரேஷ் பிரேமச்சந்திரன் இடித்துரைப்பு.
செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம் தொடர்பில் உண்மைகளை முழுமையாக வெளிக்கொணரவும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நீதி கிடைக்கச் செய்யவும் சர்வதேச விசாரணை அவசியம் என்று ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும்போதே அவர் இதனை வலியுறுத்தினார்.
செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பாக நீதி அமைச்சர் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று, விசாரணைகள் முறையாக முன்னெடுக்கப்படும் என உறுதியளித்திருந்த போதிலும், விசாரணைகள் அதனுடன் மட்டும் மட்டுப்படுத்தப்பட்டுவிடக் கூடாது என்றும் அவர் குறிப்பிட்டார்.
கிரிஷாந்தி கொலை வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டு தற்போது சிறையில் உள்ள சோமவன்ச ராஜபக்ஷ, பல ஆண்டுகளாக செம்மணி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நூற்றுக்கணக்கான உடல்கள் புதைக்கப்பட்டுள்ளன என்று கூறி வருவதை சுரேஷ் பிரேமச்சந்திரன் இதன்போது சுட்டிக்காட்டினார்.
மேலும், கொழும்புத்துறை மற்றும் அரியாலை உள்ளிட்ட பகுதிகளிலும் இவ்வாறான புதைகுழிகள் இருக்கின்றன என்றும் சோமவன்ச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார் என்றும் அவர் கூறினார்.
“சம்பவங்களுடன் தொடர்புடைய துல்லியமான தகவல்களை வழங்கக்கூடிய சோமவன்ச ராஜபக்ஷவை உடனடியாக யாழ்ப்பாணத்துக்கு அழைத்து வர வேண்டும். அவர் நேரில் சுட்டிக்காட்டும் இடங்களில் விரிவான அகழ்வாராய்ச்சிகளும் ஆய்வுகளும் மேற்கொள்ளப்பட வேண்டும்.” என்றும் அவர் வலியுறுத்தினார்.
மன்னாரில் கண்டுபிடிக்கப்பட்ட 200 இற்கும் மேற்பட்ட எலும்புக்கூடுகள் தொடர்பான விசாரணைகளின் தற்போதைய நிலைமை இதுவரை பொதுமக்களுக்கு வெளிப்படுத்தப்படவில்லை என்றும் அவர் கவலை வெளியிட்டார். அதேநேரம், தற்போது செம்மணிப் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை 400 ஐ நெருங்கியுள்ள நிலையில், இவ்விவகாரம் மிகப் பெரிய மனித உரிமைச் சிக்கலாக மாறியுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
இலங்கையில் இத்தகைய பழமையான மனித எச்சங்களின் அடையாளங்களைத் துல்லியமாகக் கண்டறிவதற்குத் தேவையான தொழில்நுட்ப வசதிகள் போதிய அளவில் இல்லை என்று சுட்டிக்காட்டிய அவர், சர்வதேச நிபுணர்களின் பங்களிப்புடன் கூடிய சுயாதீன சர்வதேச விசாரணைக் குழுவொன்று அமைக்கப்பட வேண்டும் என்றும் கொருக்கை விடுத்தார்.
இந்த விசாரணையின் நோக்கம் குற்றவாளிகளுக்குத் தண்டனை வழங்குவது மட்டுமல்லாது, நீண்டகாலமாகக் காணாமல் போனோரின் குடும்பங்களுக்கு உண்மையை வெளிப்படுத்துவதும், எதிர்காலத்தில் இத்தகைய கொடூர சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் தடுப்பதற்கான வழிமுறைகளை உருவாக்குவதுமாக இருக்க வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
இவ்விவகாரம் தொடர்பாக மனித உரிமை அமைப்புகள், சர்வதேச மனித உரிமை நிறுவனங்கள் மற்றும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றிணைந்து, உள்நாட்டிலும் சர்வதேச மட்டத்திலும் வலுவான குரல் எழுப்ப வேண்டும் என்றும் சுரேஷ் பிரேமச்சந்திரன் இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கோரிக்கை விடுத்தார்.
