துப்பாக்கி தவறுதலாக வெடித்ததில் இராணுவச் சிப்பாய் ஒருவர் மரணம்! – மன்னார் பாலத்தடி சோதனச்சாவடியில் சம்பவம்.
மன்னார் பிரதான பாலத்தடியில் அமைந்துள்ள இராணுவச் சோதனைச்சாவடியில் கடமையில் இருந்த இராணுவச் சிப்பாய் ஒருவரின் துப்பாக்கி தவறுதலாக வெடித்ததில், அவர் படுகாயமடைந்து உயிரிழந்துள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது.
இன்று திங்கட்கிழமை காலை 10 மணியளவில் இந்தத் துரதிர்ஷ்டவசமான சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்தச் சம்பவத்தில் உயிரிழந்த இராணுவச் சிப்பாய் மன்னார் சௌத்பார் இராணுவ முகாமில் கடமையாற்றி வந்த, ஜெயதிலக (வயது 46) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
உயிரிழந்த இராணுவச் சிப்பாய் மன்னார் பிரதான பாலத்தடி சோதனைச்சாவடியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்ததுடன், அங்கு கடமையில் இருந்த ஏனைய இராணுவச் சிப்பாய்களுக்குப் பொறுப்பாக இருந்து, அவர்களுக்கான கடமைத் துப்பாக்கிகளை விநியோகிக்கும் பணியை மேற்கொண்டு வந்துள்ளார்.
இதன்போது, சக சிப்பாய்களுக்கு வழங்குவதற்காகத் துப்பாக்கிகளைப் பரிசோதித்து விநியோகிக்க முற்பட்ட வேளையிலேயே, எதிர்பாராதவிதமாகத் துப்பாக்கி இயங்கியுள்ளது. இதில் படுகாயமடைந்த அவர், உடனடியாக மீட்கப்பட்டு மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
அவரின் சடலம் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் குறித்து மன்னார் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
