மலையகத்தில் பெண் வைத்திய நிபுணர் கொலை விவகாரம்: முகக்கவசம், ‘பர்தா’ அணிந்து யாழ்ப்பாணத்துக்கு தப்பி வந்த காதலனும் மனைவியும் அதிரடிக் கைது! – கடல் மார்க்கமாக வெளிநாட்டுக்கு ஓடவிருந்த திட்டம் அம்பலம்.

கண்டி, தெல்தெனிய பகுதியில் கைவிடப்பட்டிருந்த சொகுசு கார் ஒன்றிலிருந்து பெண் உடற்பயிற்சி வைத்திய நிபுணர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தின் பிரதான சந்தேகநபரான காதலன், அவரது மனைவி மற்றும் ஒரு குழந்தை ஆகியோர் யாழ்ப்பாணத்தில் வைத்து இன்று அதிகாலை அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று செவ்வாய்க்கிழமை இரவு கொழும்பு, வெள்ளவத்தையிலிருந்து யாழ்ப்பாணம், சாவகச்சேரி நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த தனியார் சொகுசு பஸ்ஸை இடைமறித்து சோதனையிட்ட போதே, இன்று புதன்கிழமை அதிகாலை யாழ்ப்பாணம் பிராந்திய குற்றப் புலனாய்வுப் பணியகம் மற்றும் வலான மத்திய ஊழல் ஒழிப்புப் பிரிவினர் இணைந்து இவர்களைக் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்படும் போது, பிரதான சந்தேகநபரான காதலன் தனது அடையாளத்தை மறைப்பதற்காக முகக்கவசம் அணிந்திருந்ததோடு, அவரது மனைவி ஒரு முஸ்லிம் பெண் போன்று ‘பர்தா’ அணிந்து முழுமையாக வேடமிட்டிருந்தார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொலிஸாரின் முதற்கட்ட விசாரணைகளின்படி, இக்கொலைச் சம்பவம் அரங்கேறிய பின்னர் கடந்த சில நாள்களாக இவர்கள் நீர்கொழும்பு மற்றும் சிலாபம் ஆகிய கடலோரப் பகுதிகளில் தலைமறைவாக இருந்ததோடு, அங்கிருந்து படகு மூலம் கடல் மார்க்கமாகச் சட்டவிரோதமான முறையில் வெளிநாட்டுக்குத் தப்பியோட முயற்சித்துள்ளமை அம்பலமாகியுள்ளது.

எனினும், சந்தேகநபரிடம் நடத்திய மேலதிக விசாரணையின் போது, தான் வவுனியாவிலிருந்து குருநாகலுக்குச் சென்று அங்குள்ள தனது மற்றைய இரு பிள்ளைகளையும் பார்த்துவிட்டு பொலிஸாரிடம் சரணடையவிருந்ததாகக் கூறித் தப்பிக்க முயன்றுள்ளார். வலான மத்திய ஊழல் ஒழிப்புப் பிரிவின் பணிப்பாளர், உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ரொஹான் ஓலுகலவின் நேரடி மேற்பார்வையில் இந்தச் சாதுரியமான கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

கடந்த ஜூன் 17ஆம் திகதி தெல்தெனிய பகுதியில் நீண்டநேரமாக நிறுத்தப்பட்டிருந்த கார் ஒன்றில் இருந்து பெண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. பொலிஸ் விசாரணையில் அவர், அம்பாறை பொது வைத்தியசாலையில் பணியாற்றிய 34 வயதுடைய ஷம்யா தர்ஷனி என்ற பெண் உடற்பயிற்சி வைத்திய நிபுணர் என அடையாளம் காணப்பட்டார்.

கொலை செய்யப்பட்ட பெண்ணின் காதலனான, பேராதனை – கன்னொருவை பகுதியைச் சேர்ந்த மென்பொருள் பொறியியலாளரே இந்தப் பெண்ணை நுவரெலியாவில் வைத்து படுகொலை செய்துவிட்டு, சடலத்தைக் காரில் கைவிட்டு தப்பியோடியிருந்தார்.

நுவரெலியாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் தங்கியிருந்த தனது சகோதரி சில நாள்களாகத் தொடர்பு கொள்ளவில்லை எனவும், அது குறித்து சோதிக்க உதவுமாறும் அவரது சகோதரர் ஜூன் 17 அன்று நுவரெலியா பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தார். பொலிஸார் அங்கு சென்று சோதித்த போது அந்த வீடு பூட்டப்பட்டுக் கிடந்துள்ளது.

அங்கிருந்த சிசிரிவி கமரா காட்சிகளைப் பொலிஸார் தீவிரமாகச் சோதித்த போது, ஜூன் 16 இரவு 9.50 மணியளவில் சந்தேகநபரான காதலன் அந்த அடுக்குமாடி குடியிருப்புக்கு வந்துள்ளார். அவர் தங்கியிருந்த 40 நிமிடங்களுக்குள் வீட்டுக்குள் ஏதோ விபரீதம் நடந்துள்ளது. அதனைத் தொடர்ந்து, இரவு 10.30 மணியளவில் சுயநினைவற்ற நிலையில் இருந்த அந்தப் பெண்ணைச் சந்தேகநபர் தூக்கிக்கொண்டு வந்து காரின் பின் இருக்கையில் ஏற்றிச் சென்றுள்ளமை சிசிரிவி கமரா மூலம் உறுதி செய்யப்பட்டது.

தற்போது யாழ்ப்பாணத்தில் வைத்துத் தம்பதியினராகக் கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்கள் இருவரும் மேலதிக மேல் விசாரணைகளுக்காகவும், நீதிமன்ற நடவடிக்கைகளுக்காகவும் நுவரெலியா பொலிஸாரிடம் ஒப்படைக்கப்படவுள்ளனர் என்று பொலிஸ் தலைமையகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.