சலே உயிரிழக்கும் வரை அதிகாரிகள் வேடிக்கை பார்க்கின்றார்களா? அவரின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம் என்றும் மனைவி கண்ணீர்மல்கத் தெரிவிப்பு.

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சை பெற்று வரும் அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலேவின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளது என்று அவரது மனைவி மனோரி சலே ஊடகங்கள் முன்னிலையில் கவலை தெரிவித்தார்.

இன்று சனிக்கிழமை கொழும்பு தேசிய வைத்தியசாலைக்குச் சென்று சுரேஷ் சலேவை நேரில் பார்வையிட்ட பின்னர், அங்கு குழுமியிருந்த ஊடகவியலாளர்களுக்குக் கருத்து வெளியிடும் போதே அவர் இதனைக் கூறினார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

“எனது கணவர் சுரேஷ் சலேவுக்கு இன்று காலை திடீரெனக் கடுமையான நெஞ்சுவலி ஏற்பட்டது. நிலைமை மோசமடைந்ததை அடுத்து, உடனடியாக அவர் அவசர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டார். அங்கு அவருக்குப் பல்வேறு அவசர மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. அந்தப் பரிசோதனைகளின் முடிவில், அவருக்குக் குறிப்பிட்ட தீவிர உடல்நலக் குறைபாடு இருப்பது மருத்துவர்களால் உறுதி செய்யப்பட்டுள்ளது.

தற்போது அவருக்கு மீண்டும் மீண்டும் நெஞ்சுவலி ஏற்படக்கூடிய அதீத அபாயம் இருப்பதாக சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். இதன்காரணமாக, அவர் விசேட மருத்துவக் குழுவினரின் தொடர்ச்சியான தீவிர கண்காணிப்பு மற்றும் சிகிச்சையின் கீழ் வைக்கப்பட்டுள்ளார்.

வெளியில் இருக்கும் சில அமைச்சர்களோ அல்லது அரசியல் தரப்பினரோ நாடாளுமன்றத்தில் சுரேஷ் சலேவின் நிலை குறித்து என்ன கூறினாலும், இங்கு அவருக்குச் சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களுக்கே அவரது உண்மையான உடல்நிலை தெரியும். சுரேஷ் சலே தற்போது எவ்விதத்திலும் நல்ல நிலையில் இல்லை. நாளுக்கு நாள் அவரது உடலில் பல்வேறு புதிய மருத்துவச் சிக்கல்கள் உருவாகிக்கொண்டிருக்கின்றன.

நிலைமை இவ்வளவு மோசமாக இருந்தும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அவர் உயிரிழக்கும் வரை வேடிக்கை பார்க்கக் காத்திருக்கின்றனர். எனினும், தமக்கு இழைக்கப்படும் அநீதிக்கு எதிராக சுரேஷ் சலே ஆரம்பித்துள்ள உண்ணாவிரதப் போராட்டத்தை எந்தவொரு சூழ்நிலையிலும் கைவிடப் போவதில்லை என்பதில் அவர் உறுதியாக உள்ளார்.” – என்று சுரேஷ் சலேவின் மனைவி கண்ணீர்மல்கத் தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.