முன்னாள் ஆட்சியாளர்களின் குற்ற இராஜ்ஜிய சதி அம்பலம்! – சம்பந்தப்பட்ட எவரும் தப்பவே முடியாது என்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் திட்டவட்டம்.

குற்ற இராஜ்ஜியத்தைக் கட்டியெழுப்புவதற்காகக் கடந்தகால ஆட்சியாளர்கள் செய்த சூழ்ச்சிகள் தற்போது அம்பலமாகத் தொடங்கியுள்ளன என்றும், இவை தொடர்பான அனைத்துச் சம்பவங்கள் குறித்தும் முறையான விசாரணைகள் என்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

பாதாள உலகக் குழு உறுப்பினர்களிடமிருந்து முன்னாள் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவின் மகன் மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் அமைப்பாளர் ஒருவர் ஆகியோர் பலகோடி ரூபா இலஞ்சம் பெற்றுள்ளனர் என்று கூறப்படும் விவகாரம் தொடர்பில் ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து அமைச்சர் மேலும் கூறுகையில்,

“நாட்டில் ஒரு குற்ற இராஜ்ஜியத்தைக் கட்டியெழுப்புவதற்காகவே முன்னாள் ஆட்சியாளர்கள் பல்வேறு சூழ்ச்சிகளைச் செய்துள்ளனர். ஆபத்தான போதைப்பொருள் குற்றவாளிகளைச் சட்டத்தின் பிடியிலிருந்து விடுவிப்பதற்காக இவர்கள் பலகோடி ரூபா இலஞ்சம் வாங்கியுள்ளனர். இதுதான் அவர்கள் கடந்த காலத்தில் கட்டியெழுப்பிய சீரழிந்த அரசியல் கலாசாரமாகும்.

கடந்தகால ஆட்சியாளர்கள் செய்த இத்தகைய சூழ்ச்சிகள் இப்போது ஒவ்வொன்றாக வெளிவரத் தொடங்கியுள்ளன. இவற்றை எந்தவொரு சந்தர்ப்பத்திலும் மூடிமறைப்பதற்கு இந்த அரசு ஒருபோதும் இடமளிக்காது.

அம்பலமாகியுள்ள அனைத்துச் சம்பவங்கள் தொடர்பிலும் பாரபட்சமின்றி முழுமையான விசாரணைகள் நடத்தப்பட்டு, நாட்டில் சட்டத்தின் ஆட்சி மிகச்சரியாக நிலைநாட்டப்படும். இந்த அநீதிகளுக்கு எதிராகச் செயற்படுவதற்காகவே நாட்டு மக்கள் எமக்குத் தெளிவான ஆணையை வழங்கியுள்ளனர்.” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.