மேயர் காண்டீபன் பதவி நீக்கத்துக்கு எதிர்ப்பு: 50 வீத வர்த்தக நிலையங்கள் வவுனியாவில் கதவடைப்பு!

வவுனியா மாநகர சபை மேயர் சு.காண்டீபனின் பதவி நீக்கத்தைக் கண்டித்தும், வடக்கு மாகாண ஆளுநருக்கு எதிராகவும் வவுனியா நகரப் பகுதியில் இன்று திங்கட்கிழமை காலை 50 வீதமான வர்த்தக நிலையங்கள் பூட்டப்பட்டு எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது.

வடக்கு மாகாண ஆளுநர் மேற்கொண்ட பதவி நீக்க நடவடிக்கையை ‘ஜனநாயகப் படுகொலை’ எனக் கண்டித்து, வர்த்தக நிலையங்களை மதியம் வரை பூட்டி ஆதரவு வழங்குமாறும், பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுப்பதற்கும் பல்வேறு தரப்பினரால் கோரிக்கைகள் விடுக்கப்பட்டிருந்தன.

அந்தக் கோரிக்கைகளுக்கு அமைய, வவுனியா நகரப் பகுதியில் உள்ள வர்த்தக நிலையங்களில் சுமார் 50 வீதமானவை இன்று காலை 3 மணித்தியாலங்கள் வரை தங்களின் வியாபார நடவடிக்கைகளை முழுமையாக நிறுத்தி, கதவடைப்புச் செய்து தமது பலத்த எதிர்ப்பை வெளிப்படுத்தியிருந்தன.

இருப்பினும், நகரின் ஏனைய வர்த்தக நிலையங்கள் மற்றும் பொதுச் சேவைகள் வழமை போல் இயங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.