திருச்செல்வத்தின் மறைவு பத்திரிகைத்துறைக்கும் சமூகத்துக்கும் பேரிழப்பு! – இறுதி அஞ்சலி நிகழ்வில் தனபாலசிங்கம் உருக்கம்.

மூத்த பத்திரிகையாளர் ஏ.என்.எஸ். திருச்செல்வத்தின் மறைவு பத்திரிகைத்துறைக்கு மாத்திரமல்ல சமூகத்துக்கும் எனக்கும் ஏற்பட்ட இழப்பு. என் நீண்ட நாள் நண்பனை இழந்து விட்டேன்.”

இவ்வாறு ‘தினக்குரல்’ பத்திரிகையின் முன்னாள் பிரதம ஆசிரியர் வீரகத்தி தனபாலசிங்கம் தெரிவித்தார்.

காலமான மூத்த பத்திரிகையாளர் ஏ.என்.எஸ். திருச்செல்வத்தின் இறுதிக்கிரியைகள் யாழ். வடமராட்சி, புற்றளையில் உள்ள அன்னாரில் இல்லத்தில் இன்று செவ்வாய்க்கிழமை காலை நடைபெற்றது.

தொடர்ந்து அன்னாரின் உறவினர் தலைமையில் இடம்பெற்ற அஞ்சலிக் கூட்டத்தில் உரையாற்றிய அவர் மேலும் தெரிவிக்கையில்,

“திருச்செல்வம் ஒரு நூலகராக இருந்தமையும் பத்திரிகைத்துறையில் சமாந்தரமாக பயணிக்கக் கூடியதாக அமைந்திருந்தது.

அவரின் பணியைப் பொறுத்தவரையில் அரசியலில் கூடுதலாக கவனம் செலுத்தாது சமூகம், மக்கள் நலன் சார்ந்த, சமயம், கல்வி போன்ற துறைகளிலே கவனம் செலுத்தி செய்திகளை வழங்கி வந்தார்.” – என்றார்.

இந்த அஞ்சலி நிகழ்வில் பத்திரிகையாளர் ஜெயக்குமார், வல்வை அனந்தராஜ், ஓய்வூதியர் சங்கத்தைச் சேர்ந்த கதிரமலை உள்ளிட்டோர் உரை நிகழ்த்தினர்.

தொடர்ந்து அன்னாரின் பூதவுடல் தகனக் கிரியைக்காக ஆனைவிழுந்தான் இந்து மயானத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

இறுதிக்கிரியைகளில் யாழ். தினக்குரல் பத்திரிகையின் முன்னாள் பிரதம ஆசிரியர் அற்புதானந்தன், பத்திரிகையாளர்கள், அரசியல் பிரமுகர்கள், பொது அமைப்புக்களைச் சேர்ந்தோர், நண்பர்கள், அயலவர்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.