ஐரோப்பாவில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு வெப்ப அலை.

ஐரோப்பாவில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு வெப்ப அலை வீசி வருகிறது. வரலாறு காணாத வெப்ப அலையால் பிரான்சில் பலியானவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை கடந்துவிட்டது.

குறிப்பாக தெற்கு ஐரோப்பாவின் பல பகுதிகளில் அசாதாரண சூழல் நிலவி வருகிறது. ஐரோப்பா கண்டனமானது, உலகின் மற்ற பகுதிகளை காட்டிலும் இருமடங்கு வேகத்தில் வெப்பம் அடைந்து வருகிறது என ஐநா உலக வானியல் அமைப்பு தெரிவித்துள்ளது.

மிக கடுமையான வெப்ப அலையால் தகித்துக் கொண்டிருக்கும் ஐரோப்பாவில் மக்களின் நிலை எப்படி உள்ளது என்பது பற்றிய பல்வேறு காணொளிகள் வெளியாகி வருகின்றன. கடைகளில் வைக்கப்பட்டு உள்ள சாக்லேட் உள்ளிட்ட தின்பண்டங்கள் உருகுவது, வெயிலில் பாத்திரங்களில் முட்டையை வைத்து மக்கள் சமைப்பது உள்ளிட்ட பல காட்சிகள் வெளியாகி இருக்கின்றன.

ஜெர்மனியில் தகிக்கும் வெப்பத்தால் டிராம் வண்டிகள் செல்லும் தண்டவாளங்கள் உருகி உள்ளதாகவும் காணொளிகள் வெளியாகி உள்ளன. மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது.

தொடரும் இத்தகைய வானிலை மாற்றங்கள் மற்றும் பாதிப்புகளை உன்னிப்பாக கவனித்து வரும் உலக சுகாதார அமைப்பு, பூமியில் மிக வேகமாக வெப்பமடையும் கண்டமாக ஐரோப்பா மாறிவிட்டது என்று கவலையை வெளியிட்டு உள்ளது.

தற்போது 15 கோடி மக்கள் கடும் வெப்பத்தில் பாதிக்கப்பட்டு இருக்கின்றனர், பள்ளிகள் மூடப்பட்டு, மின் கட்டமைப்புகள் கடுமையாக சேதம் அடைந்திருக்கின்றன என்று உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கவலையை வெளியிட்டு உள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.