12 கிலோ கேரள கஞ்சாவுடன் அனுராதபுரத்தில் ஒருவர் கைது! – ஹொரணவில் பாரிய கசிப்பு உற்பத்தியும் முறியடிப்பு.

நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் போதைப்பொருள் ஒழிப்பு விசேட நடவடிக்கையின் கீழ், அனுராதபுரம் மற்றும் ஹொரண ஆகிய பகுதிகளில் பொலிஸாரால் நடத்தப்பட்ட இரு வேறு முற்றுகைகளின் போது, 12 கிலோவுக்கும் அதிக எடையுடைய கேரள கஞ்சா மற்றும் பெருமளவிலான சட்டவிரோத மதுபானங்கள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளதுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வடமத்திய மாகாண குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமைய, அனுராதபுரம் தமன்னாகுளம் பகுதியில் நேற்று விசேட சோதனையொன்று நடத்தப்பட்டது. இதன் போது, விற்பனைக்காக மறைத்து வைக்கப்பட்டிருந்த 12 கிலோகிராம் 320 கிராம் கேரள கஞ்சா பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது.

இந்தச் சம்பவம் தொடர்பாக 39 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர் மேலதிக சட்ட நடவடிக்கை மற்றும் விசாரணைக்காக அனுராதபுரம் தலைமையகப் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, நேற்று ஹொரண மூனகம பகுதியில் வலானை மத்திய ஊழல் தடுப்புப் பிரிவினரால் மற்றுமொரு பாரிய முற்றுகை முன்னெடுக்கப்பட்டது. அங்கு இரகசியமாக நடத்தப்பட்டு வந்த சட்டவிரோத மதுபான உற்பத்தி நிலையமொன்றை முற்றுகையிட்ட பொலிஸார், மதுபானம் தயாரிப்பதற்காக வைக்கப்பட்டிருந்த 945 லீற்றர் கோடா மற்றும் காய்ச்சப்பட்ட 375 லீற்றர் சட்டவிரோத மதுபானம் (கசிப்பு) என்பவற்றைக் கைப்பற்றினர்.

இந்த முற்றுகையின் போது, ஹொரண பகுதியைச் சேர்ந்த 37 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், வலானை ஊழல் தடுப்புப் பிரிவினர் மற்றும் ஹொரண பொலிஸார் இணைந்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.