இடமாற்றம் செய்யப்பட்ட கைதிகளில் இருவர் சாவு!

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து, ஏனைய சிறைச்சாலைகளுக்கு அவசரமாக இடமாற்றம் செய்யப்பட்ட கைதிகளில் இருவர் உயிரிழந்துள்ளனர் என்று சிறைச்சாலைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

நீர்கொழும்பு மோதலைத் தொடர்ந்து அங்குனகொலபெலஸ்ஸ சிறைச்சாலைக்கு இடமாற்றம் செய்யப்பட்டிருந்த கைதி ஒருவர் இன்று புதன்கிழமை உயிரிழந்துள்ளார்.

அதேவேளை, பூசா உயர் பாதுகாப்புச் சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டிருந்த மற்றொரு கைதி, திடீர் உடல்நலக்குறைவனால் காலி தேசிய போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் என்று சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் ஏ.சி. கஜநாயக்க தெரிவித்துள்ளார்.

ஞாயிற்றுக்கிழமை மற்றும் திங்கட்கிழமை ஏற்பட்ட பாரிய மோதலை தொடர்ந்து, நீர்கொழும்பு சிறைச்சாலையில் நிலவிய நெருக்கடியைக் குறைப்பதற்காக அங்கிருந்த 1,033 கைதிகள் நாட்டின் ஏனைய பகுதிகளிலுள்ள சிறைச்சாலைகளுக்கு உடனடியாக இடமாற்றப்பட்டுள்ளனர்.

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலை முன்னின்று நடத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ள பிரதான சந்தேகநபரான ‘கட்டுவெல்லேகம சுரேஷ்’ என்பவர் பூசா அதியுயர் பாதுகாப்புச் சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டுத் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.