போகம்பறை சிறையை மீண்டும் திறக்கும் முடிவை அரசு உடனடியாக மீள்பரிசீலனை செய்ய வேண்டும்! – ஐக்கிய மக்கள் சக்தி வலியுறுத்து.
https://we.tl/t-w1tyv5fuOBQx7RZ7
கண்டி நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள போகம்பறை சிறைச்சாலையை மீண்டும் திறப்பதற்கு அரசு எடுத்துள்ள அவசர முடிவை உடனடியாக மீள்பரிசீலனை செய்ய வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தி வலியுறுத்தியுள்ளது.
எதுல்கோட்டேயிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்திராணி கிரியெல்ல, அரசின் இந்தத் தீர்மானம் எவ்வித தொலைநோக்குப் பார்வையுமின்றி எடுக்கப்பட்ட ஒன்று என்று சாடினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“கண்டி நகரின் எதிர்கால வளர்ச்சியை இலக்காகக் கொண்டே 2014 ஆம் ஆண்டு இந்தச் சிறைச்சாலை மூடப்பட்டது. தற்போது இதனை மீண்டும் திறப்பது கண்டி நகரின் அபிவிருத்திப் பாதையைத் தடுத்து, நகரின் மையப்பகுதியின் அமைதிக்கும் பாதுகாப்புக்கும் பாதிப்பை ஏற்படுத்தும்.
100 ஆண்டுகளுக்கும் மேல் பழமையான இந்தக் கட்டடத்தைப் புனரமைக்க அரசு பில்லியன் கணக்கான ரூபாவைச் செலவிட நேரிடும். இந்த நிதியை தும்பறை சிறைச்சாலையின் கட்டுமானப் பணிகளுக்குப் பயன்படுத்துவதுதான் அறிவுடைமை.
கண்டி நகரின் மையப்பகுதியில் இருப்பதால் பொதுமக்களால் இலகுவாக அணுகக்கூடிய இந்தப் பகுதி, சிறைச்சாலையாகச் செயற்படுவதற்குப் பாதுகாப்பு ரீதியாகப் பொருத்தமற்றது. நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்றது போன்ற அசம்பாவிதங்கள் இங்கும் நிகழ வாய்ப்புள்ளது.
நல்லாட்சி அரசின் காலத்தில் திட்டமிட்டபடி, இந்த இடத்தை ஒரு பன்முகத்தன்மை கொண்ட வணிக மற்றும் கலாசார மையமாக மாற்றினால், சுமார் 2 ஆயிரம் பேருக்குப் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியும்.
நாட்டில் உள்ள சிறைச்சாலைகளில் 11 ஆயிரம் கைதிகளுக்கான வசதிகள் மட்டுமே உள்ள நிலையில், 42 ஆயிரம் கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இதில் 75 சதவீதமானோர் விளக்கமறியலில் உள்ளவர்கள்.” – என்றார்.
இதேவேளை சிறைச்சாலை நெரிசலைக் குறைக்க பின்வரும் மாற்று வழிகளை முன்மொழிந்தார்.
* பிணைப் பணத்தைச் செலுத்த முடியாமல் சிறையில் இருக்கும் ஏழைக் கைதிகளுக்கு அரசு தலையிட்டுத் தீர்வு காணுதல்.
* வெளிநாடுகளைப் போல் பிணை நிதியத்தை நிறுவுதல்.
* வீட்டுக் காவல் முறையை அறிமுகப்படுத்துதல்.
சிறைச்சாலை நெரிசலைக் குறைப்பதற்கு இத்தகைய மாற்று வழிகளை ஆராயாது, போகம்பறை சிறைச்சாலையை மீண்டும் திறக்க அரசு எடுத்துள்ள தீர்மானம் கண்டிக்கத்தக்கது என்றும், இதனை உடனடியாக மாற்றியமைக்க வேண்டும் என்றும் அவர் அரசிடம் கேட்டுக்கொண்டார்.
